கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த தஞ்சையை சேர்ந்த முகமது அசாப் என்பவரை விமான நிலையத்திலேயே சுற்றிவளைத்த அதிகாரிகள், தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அப்துல் ரசாக், பழனியை சேர்ந்த முகமது கைசர் மற்றும் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த அப்பாஸ் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். முகமது கைசரை கைது செய்த போது ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.