தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே திமுகவில் தீவிரமாக பணியாற்றி, ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருந்த போதும் அவர் தனது பதவியை இழந்துள்ளார்.
ஆவின் நிர்வாகத்தில் குளறுபடி, நாசர் மகனின் அடாவடி, கட்சி நிர்வாகியின் மீது கல்லை கொண்டு எறிந்தது உள்ளிட்ட காரணங்களால் தான் நாசர் பதவி நீக்கப்பட்டார் என திமுகவினர் கூறுகின்றனர்.
அதே சமயம் திமுகவின் அதிகார மையங்களாக திகழ்பவர்களின் வற்புறுத்தலால் தான் நாசரின் பால்வளத்துறை பதவி பறிக்கப்பட்டதாக மற்றொரு தரப்பு தெரிவித்துள்ளது.
ஏனென்றால் திமுக அரசு பதவியேற்ற போதே தனது மகன் டி.ஆர்.பி ராஜாவுக்கு அமைச்சர் பதவியை பெற்றுத்தர டி.ஆர் பாலு தீவிரமாக முயற்சி செய்து வந்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில், இருந்து அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாதது அவரது முயற்சிக்கு வலுசேர்ப்பதாக இருந்தது
மேலும் எப்படியாவது தனது மகனான டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கி விட வேண்டும் என டி.ஆர் பாலுவும், எப்படியாவது அமைச்சராகி விட வேண்டுமென திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனும் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு திமுக தலைமை ஆளானது. இந்த நிலையில் கட்சியின் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பூண்டி கலைவாணனுக்கு கல்தா கொடுத்து விட்டு தனது மகனை அமைச்சராக்கியுள்ளார் டி.ஆர் பாலு. இதற்காகவே நாசரின் தலையில் கை வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால் நிர்வாக குளறுபடிதான் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு காரணமென்றால் பள்ளிகல்வித்துறையை மோசமாக நிர்வகிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ், சமூக நலத்துறையை சரிவர நிர்வகிக்காத அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆகியோரை தான் முதலில் பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
மேலும் நாசரை விட மோசமாக பொதுவெளியில் நடந்து கொண்ட, சாதியை சொல்லி திட்டிய விவகாரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மட்டுமே மாற்றப்பட்டார். நாள்தோறும் பொதுமக்களையும், கட்சி நிர்வாகிகளையும் தரக்குறைவாக நடத்தும் கே.என் நேருவும், பொன்முடியும் கட்சியின் அதிகார மையங்களாக உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உதயநிதி அமைச்சராகும் போதும் சில அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றப்பட்டன. அப்படியிருக்க அமைச்சர் நாசரிடம் இருந்து மட்டும் பதவியை பறித்தது ஏன் ? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
தமிழக அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் வலுவான பின்புலத்தையோ, அல்லது திமுக குடும்ப ஆசிர்வாதத்தையோ கொண்டுள்ளனர். அத்தகைய பின்புலம் எதுவும் இல்லாமல் அமைச்சரானவர்களில் ஆவடி நாசரும் ஒருவராவார். இதனாலேயே எளிதாக அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் வாக்குகளையும் பெற்றதாலேயே திமுக ஆட்சிக்கு வந்ததாக கருத்து நிலவி வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில், அந்த சமுதாயத்தை சேர்ந்த நாசரின் பதவியை பறித்துள்ளது அந்த சமுதாய மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.