ரூ.30, 000 கோடி கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்யும் துறை மாற்றம்; விசாரணை கோரும் பாஜக

நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அந்த துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் உண்மை என்பதாலேயே அவர் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் பாஜக, நீதி விசாரணை கோரியுள்ளது

தமிழக அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த நிதித்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின், சபரீசன் குறித்த பிடிஆரின் ஆடியோ வெளிவந்த பின்னர், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் அல்லது துறை மாற்றப்படலாம் என யூகங்கள் பரவின.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடக்கப் போவதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இதனை செய்திகளை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதுடன், அவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டுள்ளது.

புதிய நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசும், பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக சாமிநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி.ஆர் பாலுவின் மகனான டி.ஆர்.பி ராஜா தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வெளியான பிடிஆரின் ஆடியோ விவகாரமே அவரது பதவி பறிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்

அண்மையில் பிடிஆரின் குரலில் வெளிவந்த ஆடியோவில், அவர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் சேர்ந்து கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.35,000 கோடி சேர்த்துள்ளதாகவும், இது கருணாநிதி தனது வாழ்நாளில் சேர்த்த சொத்தை விட அதிகம் எனவும் தெரிவித்திருந்தார்.

பிடிஆரின் இந்த ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இந்த ஆடியோவை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் பிடிஆரின் அமைச்சரவை மாற்றம் மூலம் தங்களது குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளதாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளையடித்த விவகாரம் உண்மைதான் என்ற முடிவுக்கு தமிழ்நாட்டு மக்கள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக ஊழல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்களுடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top