கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 66 இடங்களில் வென்று பிரதான எதிர்கட்சியாக மாறியுள்ளது.
இந்நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகா மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் வாழ்த்தியுள்ளார்.
மேலும் பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகளின் கடின உழைப்பை பாராட்டுவதாகவும், இனி வரும் காலங்களில் கர்நாடகாவில் இன்னும் வேகமாக பணியாற்றுவோம் எனவும் கூறியுள்ளார்.
இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், காங்கிரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வலுவாக மீண்டு வருவோம் எனவும் நம்பிக்கையை பெற தொடர்ந்து கடினமாக உழைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.