தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இல்லாத கள்ளச்சாராய உயிரிழப்புகள் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக மரக்காணம் காவல் ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடைபெறும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து விட்டு, உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு காவலர்கள் சிலரை பணியிடை நீக்கம் செய்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம் என பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் கள்ளச்சாராயம் விற்றதாக மாநிலம் முழுவதும் 200பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வளவு வேகமாக கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்யும் காவல்துறை, முன் கூட்டியே நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் அதனை செய்யத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த செயல் கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதாக அமைந்து விடாதா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் இதனை பற்றிய மீம்ஸ்களும் வைரலாகியுள்ளன. கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்த இரு பகுதிகளும் 60 கி.மீ தொலைவில் உள்ளன. இரண்டு பகுதிகளிலும் ஒரே மாதிரியான கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வலுவான கள்ளச்சாராய கட்டமைப்பு தமிழ்நாட்டில் இயங்கி வருவது புலப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் என்பது தலைவிரித்தாடுகிறது. உள்ளூர் திமுக பிரமுகர்கள், காவல்துறை உதவியுடன் கஞ்சாவும், கள்ளச்சாராய விற்பனையும் நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை சரிவர கட்டுப்படுத்தாத #திராவிட மாடல் அரசு, உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு அழுது புலம்பி பாசாங்கு செய்வது ஏன் ?
முன்னாள் நிதித்துறை அமைச்சரும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியது போல, உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிப்பதற்கு, கள்ளச்சாராய விற்பனையை கூட #திராவிடமாடல் அரசு ஒரு கருவியாக பயன்படுத்துகிறதா எனவும், கள்ளச்சாராய விற்பனை நடந்த போதெல்லாம் சென்னையில் அமர்ந்து ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்த ஸ்டாலின், தற்போது வந்து நாடகமாடுவது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.