நமது வாழ்க்கை முறைகள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் யோகா நம்மை இணைக்கிறது. நீண்ட நாட்களாக கிரிக்கெட் மூலம் நாம் இணைந்துள்ளோம். தற்போது டென்னிசும், திரைப்படங்களும் நம்மை இணைக்கின்றன. நாம் வேறு வேறு முறைகளில் சமைத்து சாப்பிடலாம். எனினும் மாஸ்டர்செப் நிகழ்ச்சி நம்மை இணைக்கிறது
அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிட்னிக்கு வருகை தந்தனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் விஷயங்களை மேற்கோள் காட்டி பேசினார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் இரு நாடுகளும் இயங்குவதாக தெரிவித்தார்.
2014ம் ஆண்டு நான் இங்கு வந்திருந்த போது இந்திய பிரதமருக்காக 28 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை என வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி மீண்டும் சிட்னியில் இருக்கிறேன்
ஆரம்பகாலத்தில் 3Cக்களில் இந்தியா – ஆஸ்திரேலியா உறவு (Commonwealth, Cricket, Curry) வரையறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பின்னர் 3Dக்களில்( Democracy, Diaspora, Dosti) வரையறுக்கப்பட்டு தற்போது 3Eக்களில் (Energy, Economy and Education) இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வரையறுக்கப்படுவதாக தெரிவித்தார்
ஜெய்ப்பூரின் ஜிலேபி மற்றும் ஜட்கஷ் சாட் கடைகள் ஹாரிஸ் பார்க் பகுதியில் இயங்கி வருவதாக நான் கேள்விப்பட்டேன். எனது நண்பர் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்போனிசை அங்கு அழைத்து செல்ல இந்தியர்களாகிய உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்
மைதானத்துக்கு வெளியிலும் இந்தியா – ஆஸ்திரேலியா நட்பு நெருக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வாட்சன் உயிரிழந்த போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மரியாதை செலுத்தினர். மிகவும் நெருக்கமான ஒருவரை இழந்துவிட்டதை போல நாங்கள் உணர்ந்தோம்.
இந்தியாவில் திறமைக்கும் வளங்களுக்கும் பஞ்சமில்லை. இன்று இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய, இளம் புத்திசாலிகளை உற்பத்தி செய்யும் மையமாக திகழ்கிறது இன்று சர்வதேச பண நிதியம் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு கலங்கரை விளக்கமாக பார்க்கிறது.
சர்வதேச அளவில் வீசும் பொருளாதார நெருக்கடி காற்றில் தாக்குபிடிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என உலகவங்கி நம்புகிறது. பல்வேறு நாடுகளில் வங்கி கட்டமைப்பு தடுமாறி கொண்டிருக்கும் நிலையில், இந்திய வங்கிகளின் வலிமை பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது என்றார்
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேற்கு சிட்னியில் உள்ள ஒரு பகுதிக்கு லிட்டில் இந்தியா என அதிகாரப் பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர், முன்பு ஆஸ்திரேலிய பிரதமரை அகமதாபாத்தில் வரவேற்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இன்று அவர் என்னுடன் இணைந்து லிட்டில் இந்தியா தெருவுக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.