உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகின்ற 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவருடன், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பேசிய அமித்ஷா,
75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பின் போது சுதந்திரத்தின் அடையாளமாகவும் பிரிட்டிஷிடமிருந்து இந்திய மக்களிடம் ஆட்சி மாறியதன் அடையாளமாகவும் திகழும் செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
1947 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்கலால் நேரு, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து செங்கோலை பெற்றார். இந்த செங்கோல், இங்கிலாந்திடம் இருந்து இந்திய மக்களிடம் அரசாட்சி மாறியதற்கான அடையாளமாக உள்ளது. இந்திய கலாச்சாரத்தில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு பாரம்பரியத்தில் இந்த செங்கோல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சோழர்கள் ஆட்சியில் செங்கோலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எனவே இந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும். நாடாளுமன்றத்தை திறப்பதற்கு முன்னர் பிரதமர் மோடி, செங்கோலை தமிழ்நாட்டிடம் இருந்து பெற்று அதனை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உள்ளே வைப்பார். அதன்பின் இந்த செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகில் வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செங்கோல் வரலாறு:
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்டு மாதம் 15ம் நாள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியான போது, அதனை எவ்வாறு ஏற்பது என ராஜாஜியிடம் முன்னாள் பிரதமர் நேரு ஆலோசனை கேட்டார். அப்போது ராஜாஜி, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ராஜகுருவாக இருப்பவர் புதிய மன்னருக்கு செங்கோலை வழங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் எனத் தெரிவித்தார். அந்நியர் கைகளால் சுதந்திரத்தை பெறுவதை விட குருமகானின் கைகளால் சுதந்திரம் பெறுவதே சிறப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
நேரு அதற்கு சம்மதம் தெரிவிக்கவே அப்போது திருவாவடுதுறை ஆதினமாக இருந்த அம்பலவான தேசிகரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தருணத்தில் உடல்நலம் குன்றியிருந்த அம்பலவான தேசிகர், உடனடியாக செங்கோல் தயாரித்து அதனை ஆதின தம்பிரான் சாமிகளிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையில், மெளண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை பெற்று புனித நீர் தெளித்து ,ஓதுவார்கள் வேயுறுதோளியங்கன் என்று தொடங்கும் தேவார திருபதிக்கத்தை பாட, ஆதின தம்பிரான் நேருவிடம் செங்கோலை வழங்கினார்.