தேர்வு முடிவுகள் : தமிழக அரசு முக்கிய விவரங்களை மறைப்பது ஏன்?

உற்றார் உரைக்க சொல்வார் ஊரார் சிரிக்க சொல்வார் என்று நம்மூரில் ஒரு சொலவடை சொல்வார்கள். அது போல் கல்வியாளர்கள் சில கருத்துக்களை கூறும் பொழுது ஆட்சியாளர்களுக்கும், பல மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கோபம் வரலாம். ஆனால் உண்மை சுடும்.

இந்த வருடம் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பொழுது எல்லா ஊடகங்களும் கடந்த வருடங்களை விட இந்த வருடம் தேர்வு முடிவுகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை மட்டும் தான் கவனம் செலுத்தின. ஆனால் கல்வித்துறை சார்பில் 2018 – 19 வரை வெளியிடப்பட்ட முடிவுகளில் ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு பள்ளிகள், அறநிலையத்துறை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பிரித்து மாவட்டம் வாரியாக முடிவுகள் வெளியிடப்படும். இது மட்டுமல்லாமல் 590 – 600, 580 – 590 என 50 சதவிகிதம் வரை ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மாணவர்கள், இந்த மதிப்பெண்கள் எந்தெந்த பாடத்தில் பெற்றுள்ளார்கள் என்ற எண்ணிக்கை வெளியிடப்படும். இதன் மூலம் எந்தப் பகுதியில், எந்தப் பள்ளியில், எந்த பாடத்தில் மாணவர்கள் எப்படி மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்? இது குறைந்திருந்தால் எப்படி சரி செய்ய வேண்டும் என்று யோசித்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் இந்த வருடம் அப்படிப்பட்ட தரவுகள் எதையும் அரசு வெளியிடவில்லை .  இந்த விவரங்களை அரசு மறைப்பது ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இதன் மூலம் இனிவரும் நாட்களிலும் இப்பொழுது ஏதேனும் குறை இருந்தால் சரி செய்வது இயலாமல் போகிறது.

பொறியியல் கல்லூரிகளில் 12 லட்சம் வரை நன்கொடை கேட்பதாக பல பெற்றோர்கள் கூறுகிறார்கள். ஆனால் அனைவரும் மறந்துவிட்ட ஒன்று, கணினி துறையில் காசு இருந்தால், நன்கொடை கொடுத்தால் சேரலாம். ஆனால் இதே போல் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை பருவத் தேர்வில் தோல்வியுறாமல், மாணவர்களால் படிக்க முடியுமா? 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் வளாக நேர்காணலில் நல்ல நிறுவனங்கள் கிடைக்குமா? அப்படி கிடைக்கவில்லை என்றால் இத்தனை செய்தும் பலன் இல்லாமல் போய்விடாதா என்று யோசிக்க மறுக்கின்றனர். தமிழகத்தில் இந்த முறை கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் சதம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மேலும் அடிப்படை அறிவியலான இயற்பியல், வேதியல், உயிரியல் மேல் உள்ள ஈர்ப்பு மிகக் குறைந்துள்ளதை காண முடிகிறது.

தமிழ், ஆங்கிலம், பொருளியல், புள்ளியியல், கணிதம், இயற்பியல், வேதியியல் என அடிப்படை பாடப்பிரிவுகளோடு கணினி சான்றிதழ் படிப்புகள் படிக்கும் பொழுது அதிக வேலை வாய்ப்பு உள்ளது. மேலும் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள் பெற்றோர்கள் மாணவர்களின் எதிர்பார்ப்பை அறிந்து அடிப்படை பாடப்பிரிவுடன் செயற்கை நுண்ணறிவியல், கணினி பயன்பாடுகள் போன்று கணினி பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இது போன்ற பட்டங்கள் இன்னும் அரசு தேர்வுகளில் சேர்க்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் இளநிலை மின்னணு அறிவியல் (B.Es) இளநிலை நிறுமச் செயலறியல் (BCS) இளநிலை வங்கி மேலாண்மையில் (BBM) என பல படிப்புகள் இருந்தன. அரசு தேர்வு முறைகளில், பல்வேறு அங்கீகாரங்களில் இது போன்ற படிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் இது ஒழுங்குபடுத்தப்பட்டு அனைத்து படிப்புகளும் பி.எஸ்.சி., பி.காம்., பி.ஏ., என்பவைக்குள் வரையறுக்கப்பட்டு இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்று பொறியியல் படிப்பிலும் இந்தப் பிரச்சனை எழவாய்ப்புள்ளது. அறிவியல் பாடப் பிரிவுகளை மட்டும் எடுத்தவர்கள் இளநிலையில் துணைப்பாடமான கணிதம் கட்டாயம் என்பதால் இயற்பியலையோ, வேதியியலையோ சில பொறியியல் படிப்புகளையோ தேர்ந்தெடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலை மாற துறை சார்ந்த வல்லுநர்கள் ஒரு பொதுவான கருத்துக்களை விவாதித்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

இங்கு தமிழ், ஆங்கிலம் போன்ற மொழியியல் பாடங்களை படிப்பது தகுதி குறைவு என்ற சிந்தனையும், மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் மட்டுமே வரலாறு, பொறியியல், உயிரியல் போன்ற பாடங்களை எடுப்பார்கள் என்ற நிலையும் உள்ளது. ஆனால் அரசு வேலை மட்டுமல்ல இது போன்ற பாடப்பிரிவுகளை நடத்த நல்ல தரமான ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் கூட இல்லை என்பதே யதார்த்தம்.

கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்கும் பொழுது மாணவர்கள் எது படித்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதையும் தாண்டி தனக்கு என்ன பிடிக்கும், தன்னால் எதை படிக்க முடியும், அதில் எந்த அளவு தன் திறமையை வெளிக் கொண்டு வந்து உயர்ந்த பணியை செயலை செய்ய முடியும் என்று உணர்ந்து பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்.

தமிழ் படித்து ஆட்சியர் ஆனதும் கணினி பொறியியல் படித்து கடையில் பில் போடும் இடத்திலும் இதே தமிழகத்தில் உள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதுவும் குறைந்த பணி இல்லை அவர்களுக்கு கடையில் பில் போடுவதற்கு கணினி பொறியியல் தகுதி தேவையில்லை. கணினி பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.

சமீபத்தில் அரசு வேலைவாய்ப்பு துறையில் உள்ள ஒரு நண்பர் கூறியது மனதிற்கு வேதனை அளித்தது. பத்தாம் வகுப்பு அடிப்படை தேவை என்ற ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு 173 பொறியியல் பட்டதாரிகளும், 124 முதுநிலை பட்டதாரிகளும், 8000-க்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தனர் என்று கூறினார். இது போன்ற நிலை இனிமேலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் மாணவர்கள் தான் என்ன படிக்கப் போகிறோம் அதனால் என்ன சம்பளம் ஏற்படும் கிடைக்கும் என்பதையும் தாண்டி தன்னால் என்ன படிக்க முடியும் என்பதையும் உணர்ந்து படித்தால் இத்தகைய நிலை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

அரசியல் காரணங்களை தள்ளி வைத்து பட்டப்படிப்புகளில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்கள் தனக்கு பிடித்த பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்க உதவும். இது கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிக்கத் தூண்டும். அதனால் வெற்றி வாய்ப்பு தானாக ஏற்படும். அரசு இதனை உடனடியாக அமல்படுத்தாத வரை கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஒரு சில படிப்புகள் தவிர பிற படிப்புகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது காலத்தின் கட்டாயம் சிந்திக்குமா தமிழக அரசு? 

– முனைவர்.இரா.காயத்ரி, கல்வியாளர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top