முதல்வர் சாகசம், என்ன முட்டியும் முதலீடு இல்லை ஏன்? 

தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்கள் முதலீடு கேட்டு ஒரு பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே மேற்கே அரபு நாடுகளில் சிலவற்றுக்குப் போய் முதலீடு கேட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வருகிறதென்று சொன்னார். வழி மேல் விழி வைத்தவர்கள் ஏதும் வந்ததாகச் சொல்லவில்லை. இப்போது மீண்டும் சிங்கப்பூர், ஜப்பான் என்று ஒன்பது நாட்கள் பயணம் போயிருக்கிறார். முதலீடு தேடி என்கிறார்கள் அரசு மற்றும் கட்சி வட்டாரங்களில். நாமும் முதல்வரின் ட்விட்டர் பக்கம், பயணச் செய்திகள் என்று பார்த்து வந்ததில் நமது கருத்தைச் சொல்வோம்.

சிங்கப்பூரில் போய் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார்கள் முதல்வர் குழுவினர். இவற்றில் ஒன்று Hi-P International Pvt Ltd என்ற கம்பெனி தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. மற்ற ஐந்தும் திறன் மேம்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம், ஏற்றுமதி இறக்குமதியில் சலுகைகள் என்பவையே. மேலும் சிங்கப்பூர் அமைச்சர் திரு ஈஸ்வரனை 2024 ஜனவரியில் சென்னையில் நடக்கும் முதலீட்டாளர் உலக மாநாட்டுக்கு அழைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

சிங்கப்ப்பூரில் மேலும் டெமாஸெக், ஸெம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் எனும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.முதல்வர் இவற்றில் டெமாஸெக், ஸெம்ப்கார்ப் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் கிளை பரப்பி மும்பை, குர்காவ்ன் ஆகிய ஊர்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவன. இவற்றில் டெமாஸெக் சிங்கப்பூர் அரசு நிறுவனம். பல்வேறு துறைகளில் முதலீடு செய்து ஏறத்தாழ 4500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவில் மதிப்புக் கொண்ட நிறுவனம். ஸெம்ப்கார்ப் என்பது சோலார் உள்ளிட்ட பசுமை மின்கட்டமைப்புகளில் தொழில் செய்யும் நிறுவனம். கேப்பிட்டா லேண்ட் என்பது ரியல் எஸ்டேட் நிறுவனம். இவர்களிடம் பேசிப் பணம் பெறவேண்டும் என்றால் மும்பைக்கும் டில்லிக்கும் போனால் போதுமே? ஏன் சிங்கப்பூருக்குப் போகவேண்டும்? ஜனவரில விசேஷம் மறக்காம வந்துருங்க என்று அழைக்கவா?

மற்ற ஒப்பந்தங்கள் என்று பார்த்தால் திறன் மேம்பாடு. இதில் நம்மூரில் இருந்து கொண்டு ஐரோப்பா அமெரிக்கா என்று பாடம் நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. நம்மூரிலேயே ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்விச்சாலைகள் இன்றைய தேதியில் உலகுக்கு முன்னோடிகள். ஒப்பந்தம் போட்டு வாருங்கள், எம் எதிர்காலத் தூண்களைத் திறன்மிக்கவர்களாய் ஆக்கித்தாருங்கள் என்று கேட்பது எளிது, செலவும் குறைவு, கண்காணிப்பதற்கும் வசதி. வெளிநாட்டுக்காரர்களிடம் ஏன் ஒப்பந்தம் போட்டுத் திறன் மேம்படுத்த வேண்டும்? (அடிப்படைக் கல்வித் தகுதிகளுக்கான நமது பாடத்திட்டங்களை தற்காலத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தகவமைக்காத வரை சிங்கப்பூர், சிகாகோ, சிங்கப்பெருமாள்கோவில் என்று எங்கிருந்து ஆட்கள் வந்து கற்றுக்கொடுத்தாலும் கஷ்டம் தான்.

சரி சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் என்று போனார் என்றே வைத்துக் கொள்வோம். வரவேற்க அந்த ஊர்க்காரர்கள் யாருமேவா இல்லை? இங்கிருந்து முந்தைய நாள் ஒருவர் போய் அங்கே முதல்வர் வரும் போது தயாராக நின்று மாலையிட்டு வரவேற்பது ஏனோ? சரி… திராவிட மாடல் 2000 ரூபாய் கொடுத்தாலும் நமக்குப் புரியாது, விட்டுவிடலாம்.

ஜப்பானில் எவ்வளவு முதலீடு தேறியது என்று பார்க்கலாமா?

819 கோடி ரூபாய்கள், 6 நிறுவனங்களிடம் இருந்து வருகிறதாம். முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் ஜேசிபி ஓட்டுவதும், புல்லட் ரயிலில் போவதுமாகப் படங்கள் போட்டுள்ளார். ஜெட்ரோ எனும் வியாபாரிகள் சங்கம் போன்ற அமைப்பிடம் பேசி 2024 ஜனவரில மாநாடு இருக்கு வந்துருங்க என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க க்யோகுடோ சட்ரக் எனும் கம்பெனியிடம் 113 கோடி ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தம். மாம்பாக்கத்தில் தொழிற்சாலை வருகிறதாம்.

கும்மிடிப்பூண்டியில் செயல்படும் மிட்சுபா இந்தியா எனும் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு 155 கோடி ரூபாயில் ஒப்பந்தம் (ஆக, இது புது முதலீடு இல்லை.)

ஷிமிசு என்ற நிறுவனம் கட்டுமானம், பொறியியல் போன்ற தொழில்களில் பணம் போடுவதாகச் சொல்லியிருக்கிறது. எவ்வளவு என்ற விவரம் இல்லை.

200 கோடி ரூபாய்க்கு பாலிகார்பனேட் கூரைகள், மின்னணுப் பொருட்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். மேலதிக விவரங்கள் வரட்டும், அலசுவோம்.

வானூர்தி, ஆயுதங்கள், கட்டுமானம் ஆகியவற்றுக்கு எஃகு உதிரிபாகங்கள் தயாரிக்க சடோ ஷோஜி மெட்டல் என்ற கம்பெனியுடன் 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்.

செமிகண்டக்டர், எஃகு, சோலார் பாகங்கள் ஆகியவை தயாரிக்க 150 கோடி ரூபாயில் ஒப்பந்தம்.

இவை தவிர புல்லட் ரயில் நம்மூருக்கு வரவேண்டும் என்று ஒரு அறிக்கை. சென்னை டோக்கியோ நேரடி விமானம் விடவேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை.

இப்படியாகத்தானே பயணம் இனிதே நிறைவேறித் தாயகம் வந்துள்ளார் முதல்வர் (வைகோ கட்சி ஆபீசா என்று கேட்பவர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும்).

நம் கேள்விகள்:

இந்தியாவில் கிளை பரப்பிய சிங்கப்பூர் நிறுவனங்களை ஏன் சிங்கப்பூர் போய்ப் பார்த்துப் பேசி முதலீடு கோர வேண்டும்?

இவ்வளவு தூரம் ஒரு மாநில முதல்வர் போய் ஜப்பானில் பேசி ஈர்க்க முடிந்த முதலீடு 800 கோடி ரூபாய் அளவுக்கே என்பது ஏன்?

தொழிற்சாலைகள் எல்லாம் சென்னையைச் சுற்றியே இருப்பது ஏன்? கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி இங்கே எல்லாம் அமைக்கலாமே?

கர்நாடகத்தில் 20000, 30000 என்று கோடிகளில் முதலீடுகள் குவிகின்றன. உத்தரப்பிரதேசத்தில் சாம்சங், ஆப்பிள் என்று ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடுகள் வருகின்றன. கேரளத் தொழிலதிபர்கள் துபாயில் இருந்து தெலுங்கானா போய்ப் பணம் போட்டுத் தொழில் செய்கிறார்கள். இந்த மாநில முதல்வர்கள் வெளிநாடு போய் ஆட்களைப் பார்த்துப் பேசவில்லை. அதிகாரிகளையோ அமைச்சர்களையோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேசப்பணித்து முதலீட்டை அவர்கள் மாநிலத்துக்குக் கொண்டு போகிறார்கள்.

மாநில நிர்வாகம் மெச்சத்தக்க வகையில் இல்லை. முதலீடுகள் வராதமைக்கு இதுவே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தோர். முதலீட்டாளர் மாநாடு என்று போட்டு முதலீட்டை ஈர்ப்பதாகச் சொல்கிறார் முதல்வர். நம் கேள்விகளை இப்போதைக்குக் கடிதோச்சி மெல்ல எறிவோம். 2024 ஜனவரியில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகள் வரவில்லை என்றால் மாநிலத்தின் முதலீட்டு ஈர்ப்புத் திறன் குறித்த கூரிய கேள்விக்கணைகளை முதல்வர் எதிர்கொண்டு பதில் தரவேண்டும்.

– அருண் பிரபு 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top