“திமுக என்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல.
அது மனித மரியாதைகளுக்கும்,
சமுதாய வளர்ச்சிக்கும்,
இந்திய நாகரிகத்திற்கும்,
நமது கலாசாரத்துக்கும் ஏற்பட்டிருக்கின்ற
ஓர் பேரழிவின் அறிகுறி (A Social Cultural Menace)” என்றார் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவரது கருத்து முற்றிலும் உண்மை என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறது திமுக.
தமிழர்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை, இலக்கியம், ஆன்மிகம், அரசியல் முதலியவற்றை சீர்குலைப்பதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது திமுக.
மது விசயத்திலும் திமுக செய்திருக்கும், செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் மற்ற மாநில மக்கள் முன் நம்மை எல்லாம் வெட்கி தலைகுனிய வைப்பவை.
திமுகவை ஆரம்பித்த அண்ணாதுரை முதற்கொண்டு, அவருக்கு முன்பிருந்த பக்தவத்சலம், காமராஜர், குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மூதறிஞர் ராஜாஜி ஆகிய ஆறு முதலமைச்சர்களும் நம் தமிழகத்தில் மதுபான விற்பனையை அனுமதிக்கவில்லை. அண்ணாதுரைக்குப் பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி மதுவை ஆறுபோல ஓட விட்டார்! தமிழர்களின் வாழ்வைக் கூறுபோட்டார்!
மது விற்பனையை அனுமதிக்க முடிவெடுத்தார் கருணாநிதி. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தனது தள்ளாத வயதிலும் 1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டு கருணாநிதி வீட்டிற்குப் போய் அவரை சந்தித்தார். தமிழகத்தில் மதுவிலக்கை ரத்துச் செய்தால் அது எதிர்கால சந்ததியினரை மிகவும் பாதிக்கும் என்று சொல்லி மன்றாடினார். 20 நிமிடங்கள் பேசி கருணாநிதியின் மனதை மாற்ற முயன்றார் ராஜாஜி. ஆனால் அவரது பேச்சைக் கேட்கவில்லை கருணாநிதி.
1937ல் சே லத்தில் மதுவிலக்கை அமல்படுத்திய ராஜாஜி, கருணாநிதியின் கல்(ள்) நெஞ்சத்தைக் கண்டு மனமுடைந்து போனார்!
மது விற்பனை மூலம் வரும் வருமானம், தொழுநோயாளி கையில் வழியும் வெண்ணெய்க்குச் சமம் என்று சொன்ன திமுக நிறுவனர் அண்ணாதுரையின் கூற்றுக்கு மாறாக, வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 1971, ஆகஸ்டு 30ஆம் தேதி தமிழகத்தில் மதுவிலக்கை ரத்துச் செய்தார் மனசாட்சியற்ற கருணாநிதி!
அதுவரை நாட்டிலேயே மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலங்கள் எனும் பெருமையை குஜராத்தும், தமிழகமும் பெற்றிருந்தது. காந்தி பிறந்த குஜராத் தப்பித்துக் கொண்டது, தமிழகம் சிக்கிக்கொண்டது!
அன்றிலிருந்து இன்றுவரை, இடையில் கொஞ்ச கொஞ்ச காலங்கள் தவிர்த்து, கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவன் பிறந்த நம் தமிழகத்தில் மது என்பது மாமழை வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது…
2016 சட்டமன்றத் தேர்தல் காலத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவேன் என்றது திமுக. 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுவுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது திமுக. ஸ்டாலின் அவரது குடும்ப சகிதம் நின்று கொரோனா காலகட்டத்தில் கூட மதுவுக்கு எதிராக கோஷம் போட்டார்.
மதுவினால் தமிழகத்தில் இளம் பெண்கள் நிறைய பேர் விதவைகள் ஆகி நிற்பதாக நீலிக்கண்ணீர் வடித்தார் கருணாநிதி மகள் கனிமொழி.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஏதேதோ பேசிய திமுக, ஆளுங்கட்சி ஆனப் பிறகு அப்படியே மாறி செயல்படுகிறது. திமுக அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில், திமுகவின் நடைமுறையே அப்படித்தான். எதிர்க்கட்சி திமுக வேறு, ஆளுங்கட்சி திமுக வேறு.
திமுக ஆண்டுகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நம் தமிழகத்தில் 5239 மதுக்கடைகள் இருக்கின்றன. அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுக்கடைகள் திறந்திருந்த நேரத்தை விட திமுக ஆட்சிக் காலத்தில் கூடுதல் நேரம் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசு அனுமதித்திருக்கும் நேரமே 12 மணி நேரம்! அதுபோக கள்ள சந்தை நேரம் வேறு.
மது பார்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன!
பெண்கள் குடிக்க தனி பார் வசதி செய்து கொடுத்திருக்கிறது திமுக அரசு!
பலமான எதிர்ப்பு மட்டும் இல்லையென்றால், படிப்படியாக கோயில், மசூதி, தேவாலயம், கல்லூரி, பள்ளி, மருத்துவமனை என எல்லா இடங்களிலும் மது விற்பனையைத் தொடங்கி விடுவார்கள் திமுகவினர்.
ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் எலைட் மதுக்கடைகளையும் திறந்து வைத்திருக்கிறார்கள்.
இவற்றின் நீட்சியாக, நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத முடிவை திமுக அரசு அறிவித்தது.
திமுக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை 24-.04-.2023 அன்று காலை வெளியிட்டிருந்த அரசிதழில், “தமிழ்நாடு அரசின் சிறப்பு அனுமதி பெற்று, திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், அரங்க கூட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஆண்டு கட்டணம் அல்லது நிகழ்ச்சிக்கான கட்டணம் செலுத்தி மது விருந்து நடத்திக் கொள்ளலாம்” என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. அவற்றிற்கான கட்டண விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
திமுக அரசின் அந்த அரசாணையைக் கண்டு தமிழகமே கொதித்தெழுந்தது! அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுநல விரும்பிகள், அறிவுஜீவிகள் எனப் பலரும் திமுக அரசின் முடிவை எதிர்த்துக் குரல் எழுப்பினார்கள்.
குறிப்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் இந்த மக்கள் விரோதச் செயலை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
“மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
வழக்கமாக அண்ணாமலை அவர்களின் எதிர்ப்புக்குப் பணியும் திமுக அரசு, இந்த விசயத்திலும் பணிந்தது.
அதன் விளைவாக, தமிழக அரசின் மது விநியோக சட்டத் திருத்தத்தில், வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களில் மது பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான அறிவிக்கை நீக்கப்பட்டு அரசிதழில் வெளியிட்டார்கள்.
பலமான எதிர்ப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால், பின்னர் படிப்படியாக கோயில், மசூதி, தேவாலயம், கல்லூரி, பள்ளி, மருத்துவமனை என எல்லா இடங்களிலும் மது விற்பனையைத் தொடங்கிவிடுவார்கள் திமுகவினர்.
தமிழ்ச் சமுதாயம் பண்பட்ட சமுதாயம். அதை, சாராயத்தை ஊத்தி ஊத்திக் கொடுத்துப் பாழ்படுத்தும் ஸ்டாலினையும், திமுகவையும் வரலாறு மன்னிக்காது!
-வீரா