தமிழக அரசு செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பதிலும் செய்யத்தகாதவற்றை செய்வதிலும் முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உக்கிரமடைந்து வருவதற்கு மாநில அரசின் தவறான அணுகுமுறையே காரணம். மே மாதம் 29-ந் தேதி மாலை சென்னை மாநகரில் பேருந்துகள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டுவிட்டன. எவ்வித முன்னறிவிப்புமின்றி பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மேற்கொண்ட இந்த வேலை நிறுத்தம் லட்சக்கணக்கான மக்களை அலைக்கழித்துவிட்டது.
சென்னையில் 625 வழித்தடங்களில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் தினந்தோறும் பல டிரிப்களில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து சேவையை நம்பி சுமார் 30 லட்சம் பயணிகள் உள்ளனர்.
வெள்ளை போர்டு பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இப்பின்னணியில் எரி பொருள் செலவைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்தும் வகையிலும் உலக வங்கியின் நிதியுதவியுடன் இவ்வருடம் 500 மின்சாரப் பேருந்துகளையும், அடுத்த ஆண்டு மேலும் 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்குவதற்கான முயற்சியில் போக்குவரத்துத் துறை ஈடுபட்டு வருவதாக அரசு சொல்கிறது!
புதிதாக வாங்கப்படும் மாநகரப் பேருந்துகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கான சாத்தியம் குறித்து போக்குவரத்துத் துறை உன்னிப்பாக ஆராய்ந்து வந்தது. இந்த முன்னெடுப்புக்கு இதில் தனியார் பங்களிப்பு தேவையில்லை என தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் எதிர்ப்பு தெரிவித்தது.
தொ.மு.ச., மார்க்சிஸ்ட் சார்புடைய சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அண்மையில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. உலக வங்கி முன்மொழிந்துள்ள கருத்துரு அடிப்படையில் புதிதாக வாங்கப்படும் பேருந்துகளை அரசு மற்றும் தனியார் இணைந்து இயக்கலாமா? என ஆய்வு செய்வதற்கு மட்டுமே தற்போது குழு அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகள் அரசின் வழித்தடத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும். அதிகப் பொருட் செலவில் வாங்கும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் போது நடைமுறை சிக்கல்கள் எழுவதை தவிர்ப்பதற்காகவே தனியார் பராமரிப்பில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டது, தெளிவை ஏற்படுத்தவில்லை. மாறாக குழப்பத்தையே உச்சப்படுத்தியது. இதனால் போக்குவரத்து ஊழியர்களிடையே அவநம்பிக்கை வலுக்கத் தொடங்கியது. இத்தகைய சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஊழியர்களை நியமிக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துவிட்டது என்ற தகவல் மே 29-ந் தேதி மாலை காட்டுத் தீயாக பரவியது.
இதையடுத்து எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநகரப் பேருந்துகளை ஓட்டுநர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தினர். பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். பாரிமுனை, சென்ட்ரல், தியாகராய நகர், வடபழனி போன்ற முக்கியப் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மின்சார ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் நெரிசல் ஏற்பட்டது. மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் இயக்கப்படாத பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல மணிநேரம் காத்திருந்ததுடன் கடும் அவதிக்கும் ஆளானார்கள். சுமார் ஒரு மணிநேரம் மட்டுமே வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது என்று கூறப்பட்டாலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு தணிய 4 மணிநேரத்திற்கும் மேலாகிவிட்டது. தி.மு.க. சார்புடைய தொ.மு.ச.வைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது திராவிட மாடல் அரசின் பித்தலாட்டத்தை வெளிப்படுத்தியது. அரசுக்கும் தி.மு.க. சார்புடைய அமைப்பான தொ.மு.ச.விற்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்பதையே 29-ந் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட தி.மு.க.வால் மாநில நிர்வாகத்தை எவ்வாறு செம்மையாக நடத்த முடியும்? என்ற கேள்வி ஒவ்வொருவரையும் உலுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான பதில் உடனடியாக கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்பது திண்ணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
-ஆர்.பி. எம்.