திராவிட மாடல் குட்டிக் கரணங்கள் !

சமீபகாலமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எங்கு பேசினாலும் ”திராவிட மாடல்” என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருப்பதில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் வாயில் வராத இந்த புதிய சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று ஆராய்ந்து பார்த்தபோது எங்களுக்குப் புரிந்து விட்டது. தேய்ந்து போன சித்தாந்த சிதைவுதான் திராவிட மாடல் என்பது. சுருக்கமாகச் சொன்னால் முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் திராவிட மாடல். அவை என்னவென்று பார்ப்போம்.


தமிழனா?
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாடுபடுவதுதான் எங்களது தலையாயக் கொள்கை என்று முழுக்கமிடுவார்கள். ஆனால் இவர்களின் முன்னோடிகளான நீதிக் கட்சியில் தமிழன் யாருமே தலைவராக இருந்ததில்லை.
பிராமண எதிர்ப்பு
இவர்களது அடிப்படை சித்தாந்தமே வெறுப்பின் அடிப்படையில் அமைந்ததுதான். இவர்களது முதல் துவேஷம் பிராமண எதிர்ப்பு கோஷம். பிராமணர்களை மிகவும் கேவலமாகவும், நாகூசும்படியான வாரத்தைகளாலும் வசை பாடினர். பல இடங்களில் பூணூலை அறுத்தும் உடல் ரீதியாக துன்புறுத்தியும், வன்முறை வெறியாட்டம் ஆடினர். பிற்காலத்தில் இவர்களது தொழிற்கூடங்களிலும், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போது நிர்வாகத்திற்கும் பிராமணர்கள் தேவைப் பட்டனர். அவ்வளவு ஏன்,  பல திராவிடத் தலைவர்களின் குடும்பங்கள் பிராமண சமுதாயத்தோடு திருமண உறவு கூட ஏற்படுத்திக் கொண்டனர். எனவே தங்களது கோஷத்தை மாற்றினர். நாங்கள் பிராமணர்களை எதிர்க்கவில்லை, ”பிராமணீயத்தை” தான் எதிர்க்கிறோம் என்றார்கள்.

கடவுள் மறுப்பு
அடுத்து இவர்கள் கையில் எடுத்தது ”கடவுள் எதிர்ப்பு முழக்கம்”.  தில்லை நடராஜனையும், ஸ்ரீரங்க நாதனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகத்தின் பொன்னாள் என்றனர். உருவ வழிபாட்டைக் கிண்டல் செய்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் தெருவுக்கு தெரு இவர்களது தலைவர்களின் சிலையை வைத்து வழிபட்டனர். கழகக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தனர். முழக்கம் மாறியது. நாங்கள் நாத்திகர்கள் அல்ல. ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” எங்களது நம்பிக்கை என்றனர்.
தனித் தமிழ்நாடு
இவர்களது இன்னொரு வீர முழக்கம், ”தனித்தமிழ்நாடு” கோஷம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று முழக்கமிட்டனர். மத்திய அரசு பிரிவினைவாத எதிர்ப்பு சட்டம் இயற்றியவுடன் நாங்கள் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை. ”மாநில சுயாட்சிதான் கேட்கிறோம்” என்று மாற்றிக் கொண்டனர்.
இந்தி எதிர்ப்பு
அடுத்து இவர்களது இன்னொரு முழக்கம் இந்தி எதிர்ப்பு. 1965 கால கட்டத்தில் இந்தி எதிர்ப்புக்காக மிகக் கடுமையான போராட்டங்கள் நடத்தினர். வன்முறை வெடித்தது. தமிழ்நாடு முழுவதும் கண்ட இடங்களில் எல்லாம் இந்தி அரக்கி ஒழிக என்று பெயின்டால் எழுதி வைத்தனர். இவர்களது பிள்ளைகள் இந்தி படிக்க ஆரம்பித்தனர். அது மட்டுமல்லாமல் தமிழினத் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளிலேயே வியாபாரத்திற்காக இந்தியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். இதற்கு அவர்கள் சொல்லுகின்ற விளக்கம் நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என்றார்கள்.
வாரிசு அரசியல்
ஒரு முறை கருணாநிதியிடம் அடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தானே என்று நிருபர் கேட்டதற்கு கருணாநிதி கோபத்துடன் தி.மு.க ஒன்றும் சங்கர மடமில்லை என்றார். ஆனால் இன்று  ”முத்துவேல் கருணாநிதி மடமாக” மாறி விட்டது.
நீட் எதிர்ப்பு
நீட் தேர்வை எதிர்த்த போது நாம் கேள்வி கேட்டது மற்ற மாநிலங்களெல்லாம் ஏற்றுக் கொண்டபோது நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று. அவர்கள் சொன்ன பதில் சமூக நீதிக் கொள்கை வாதிகளான நாங்கள் அனைத்து மக்களுக்காகவும் போராடி வருகிறோம். இப்போது அவர்கள் கேட்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமாவது விதி விலக்கு தாருங்கள் என்று.
இப்படி ஏராளமான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போன்றது. கொள்கைக்காக அதை எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியத் தயார் என்றனர். வேட்டி என்பது கொள்கை போன்றது. பதவிக்காக அதையும் அவிழ்த்து எறியத் தயார் என்று இப்போது வாழ்ந்து காட்டுகின்றனர்.
வெளிப்படையாகச் சொன்னால் வேட்டி இல்லாமல் தோளில் துண்டோடு நிற்பதுதான் திராவிட மாடல்.

* நீதிக் கட்சியில் தமிழர் யாரும் தலைவராக இருந்ததில்லை
* பிராமண எதிர்ப்பு ‘பிராமணீயம்’ எதிர்ப்பாக மாறியது
* கடவுள் மறுப்பு ‘ஒன்றே குலம்’ ஒருவனே தேவன் என ஆகியது.
* தனித் தமிழ்நாடு கோஷம் மாநில சுயாட்சியாக மாறியது.
* இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பாக மாறியது.
திராவிட குட்டிக் கரணங்கள் ஏராளம் ஏராளம்..

வெளிப்படையாகச் சொன்னால் வேட்டி இல்லாமல் தோளில் துண்டோடு நிற்பதுதான் திராவிட மாடல்.

  • வே. வைரவேல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top