கரீப் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 143 ரூபாய் வீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 07.06.2023 அன்று நடந்தது. இதில், 2023-2024 ஆம் ஆண்டில் வேளாண் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பாண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) ரூ.143 உயா்த்தி, குவிண்டால் நெல் ரூ.2,183-க்கு கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை கடந்த 07.06.2023 அன்று ஒப்புதல் அளித்தது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக நெல் கொள்முதல் விலை அதிகபட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 2018-19-ஆம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.200 உயா்த்தப்பட்டிருந்தது.
இதன்படி, குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.128 முதல் அதிகபட்சமாக ரூ.805 வரையில் விளைபொருள்களின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. காரீஃப் பருவ கால பயிா்களில் நெல் கொள்முதல்தான் அதிகப்படியாக நடைபெறுகிறது. இந்த வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை 5.3 சதவீதம் முதல் 10.35 சதவீதம் வரை உயா்த்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதுசம்மந்தமாக பேசிய மத்திய உணவு அமைச்சா் பியூஷ் கோயல், ‘உள்நாட்டுப் பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பின் மூலம் விவசாயிகள் பலனடைவார்கள். கடந்த ஆண்டு விலையைவிட தற்போது கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பருப்பு பொருள்களின் விலை குறைவாகவே உள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான குழு அவ்வப்போது கூடி ஆலோசித்து வருகிறது’ என்றாா்.
கடந்த சில ஆண்டுகளாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் போன்றவற்றின் சாகுபடியை மத்திய அரசு ஊக்குவிப்பதுடன் அவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து வழங்கி வருகிறது.
2022-23-ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2021-22-ஆம் ஆண்டைவிட 14.9 மில்லியன் டன் அதிகமாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக உற்பத்தி இதுவாகும்”. என தெரிவித்திருந்தார்.
மோடியின் தலைமையிலான மத்திய அரசு மீண்டும் மீண்டும் தன்னை விவசாயிகளின் அரசு என்பதை நிரூபித்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.