பாஜக தொண்டர் செந்தில் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்ட14 மணி நேரத்திற்குள் பாஜக வழக்கறிஞர்கள் முயற்சியால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கன்யாகுமரி பருத்திவிளை பகுதி தக்கலையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் செந்தில்குமார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரிஸா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்தார்.
இது சம்மந்தமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக உறுப்பினர் தினேஷ் குமார் என்பவர் கடந்த 07.06.2023 அன்று தக்கலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தக்கலை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று 08.06.2023 அன்று அவரைக் கைது செய்தனர். கைது தொடர்பான தகவல் பரவியதும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் 14 மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஒரு வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கட்டெறும்பு என்கிற இசக்கி, சென்னையை சேர்ந்த சரவணபிரசாத் என பாஜக ஆதரவாளர்கள், நிர்வாகிகள் உட்பட 3 பேரை தமிழக காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்தும் உள்ளது. அவர்களை கைது செய்து நிரந்தரமாக உள்ளே வைத்து மிரட்ட தமிழக காவல் துறை செய்த முயற்சிகள் அடுத்தடுத்து பனால் ஆனது.
இது சம்மந்தமாக பாஜக தொழிற்பிரிவு மாநில துணை தலைவர் செல்வ குமார் தனது டிவிட்டரில் தெரிவித்ததாவது : “நிர்வாக ரீதியாக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து மக்களின் ஒட்டுமொத்த கோபத்தை சம்பாதித்துள்ளது திமுக. தினசரி ஒரு பாஜக தொண்டரை கைது செய்வதின் மூலம் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரித்துவிடலாம் என பகல்கனவு காண்கிறது. தூத்துகுடியில் கிராம நிர்வாக அதிகாரியின் உயிருக்கு மணல் கொள்ளையர்களால் ஆபத்து என்பது தெரிந்தும் அவர் உயிரை காப்பாற்ற வக்கற்ற அரசு, பாஜக தொண்டர்களை மிரட்டி பார்க்கிறது. வேங்கைவயலில் மலம் கலந்தவனை 180 நாட்களாகியும் கைது செய்ய துப்பற்ற காவல்துறை கன்னியாகுமரி தக்கலையை சேர்ந்த பாஜக தொண்டர் அன்பு சகோதரர் செந்தில்குமார் அவர்களை இன்று காலை கைது செய்தது. பின்னர் கன்னியாகுமரி மாவட்ட பாஜக மற்றும் வழக்கறிஞர்களின் தீவிர முயற்சியால் சற்று முன் விடுவிக்கப்பட்டார்” என தெரிவித்திருந்தார்.
தொடர் கைதுகளால் பாஜக எனும் இரும்புக்கோட்டைக்குள் ஓட்டை போட முடியாது என்று இப்போதாவது திமுகவுக்கு புரிந்திருக்குமா? பார்க்கலாம்!