திராவிடமாடல்: சேமிப்புக் கிடங்கில் 70 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயம்

திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழைக்காலத்தின் போது நெல்மூட்டைகள் நனைந்து வீணாகின்றன. கூடுதல் முன்னெடுப்புகளை மேற்கொண்டால் சேதத்தின் அளவை குறைக்கலாம். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் எதையும் தி.மு.க. அரசு மேற்கொள்ள முன்வரவில்லை. நெல் மூட்டைகள் நாசமாகப் போகட்டும் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது என்ற விமர்சனத்தில் உண்மையில்லாமல் இல்லை.

இது ஒருபுறம் இருக்க இந்த கொளுத்தும் கோடை வெயில் காலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரம் டன் எடை கொண்ட நெல் மூட்டைகள் மாயமாகிவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு அப்பாலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி வறட்சியான மாவட்டம் என்று கருதப்படுகிறது. இங்குள்ள பென்னாகரம், பாலக்கோடு, அரூர், மாரண்டஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைகின்ற நெல் இம்மாவட்ட மக்களின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை என்பதை புள்ளி விவரம் புலப்படுத்துகிறது.

இப்பின்னணியில் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டன் கணக்கில் நெல் வரவழைக்கப்பட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்படுவது வழக்கம்.

ஆண்டுதோறும் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இப்போது இதில் இமாலய முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 7000 டன் நெல் மூட்டைகள், அதாவது 70 ஆயிரம் மூட்டைகள் மாயமாகி விட்டன என்ற திடுக்கிட வைக்கும் தகவலால் அதிர்வலை உச்சம் பெற்றுள்ளது.

இவ்விவகாரம் குறித்து முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள், வாணிபக்கழக திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் முறைகேடுகள் நடக்கிறது என்று சென்னையில் உள்ள நிர்வாக இயக்குநரிடம் ஊழியர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கண்காணிப்பு அதிகாரியை விசாரிக்குமாறு நிர்வாக இயக்குநர் பணித்தார். அதனடிப்படையில் ஒரு குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு, முறைகேட்டின் பரிமாணம், ஏற்கனவே வந்துள்ள புகாரைவிட பலமடங்கு அதிகம் என்பதை வெளிப்படுத்தியது. 22,000 மெட்ரிக் டன் நெல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக முறையான ஆவணம் எதுவும் காட்டப்படவில்லை.

நெல் மூட்டைகளை பிரமிடு வடிவில் அடுக்கி வைத்திருக்க வேண்டும் என்பது நடைமுறை சார்ந்த விதிமுறை. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் இது பின்பற்றப்படவில்லை. தாறுமாறாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்த நெல் மூட்டைகளை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மற்றும் தர ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுதான்  கண்காணித்து வந்தது. இங்கு சுமார் 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆய்வாளர் முறைகேடு குறித்த புகார் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே மோப்பம் பிடித்து பணியிடமாற்றம்  வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். புதிதாக இங்கு நியமிக்கப்பட்டு இருப்பவர் பொறுப்பேற்க தயக்கம் காட்டி வருகிறார். இங்கு பொறுப்பு எடுத்துக் கொண்டால் முறைகேடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அது எளிதல்ல. கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப் போல இருப்பதால்தான் இங்கு பொறுப்பேற்பதை, புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர் தட்டிக்கழித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பொதுவாக கிலோ கணக்கில் நெல் குறைவது சகஜமான நிகழ்வு என்று கூறப்படுகிறது. எறும்பு தின்றுவிட்டது, எலி விழுங்கிவிட்டது, எருது சாப்பிட்டுவிட்டது என்றெல்லாம் நொண்டிச்சாக்குகளை கூற அதிகாரிகள் தயங்குவதில்லை. ஆனால் 7000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தை இவ்வாறு நொண்டிச் சாக்குகள் கூறி மூடி மறைத்துவிட முடியாது.

நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் மாநில ஆளுங்கட்சியான தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டை உதாசீனப்படுத்திவிட முடியாது.  காரணம், ஆளும் கட்சி  பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய களவு நடந்திருக்க முடியாது.

ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கும் இந்தப் படுபாதகச் செயலை செய்யும் திராவிட மாடல் திருடர்களை மக்கள் சும்மா விடப் போவதில்லை !

-ஆர். பி. எம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top