புண்ணிய பாரத நாடெங்கள் நாடே! பார்தனில் அதற்கில்லை ஈடே!
இமயம் முதல் குமரி வரை பாரத தேசம் முழுவதும் ஆன்மீக ஊற்று ஊடுருவிப் பாயும் தேசமிது. இங்கு எந்த ஒரு மாநிலத்தின் தொன்மையயையும், அங்குள்ள கோவில்களை விட்டு சொல்லிவிட முடியாது. பல்வேறு அரசர்களும் அவரவர் எல்லையை ஸ்தாபித்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு நின்ற புள்ளி ஆன்மீகம்! ஆம் நம் பாரத தேசத்தில் கல்லும், மண்ணும், நீரும்,நெருப்பும்,மலையும்,கடலும்,மரமும், செடியும் கடவுளே!
ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களை வழிநடத்திய குருமார்களையும், சித்தர்களையும் நினைவுகூறும் வகையில் ஊர்ப்பெயரும், கோவில்களும் அமைத்தனர்.
அதுபோல காஷ்யப மாமுனிவர் தவம் செய்து, வாழ்ந்து வந்த புண்ணிய பூமி காஷ்மீர். இங்கு இருந்த சக்தி பீட கோவில்களில் முதன்மையானதாகப் போற்றப்பட்ட சாரதாம்பாள் கோவில் கைலாயத்தில் சிவன் வசிப்பது போல், வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் வசிப்பது போல், காஷ்மீரத்தில் சாராதா தேவி வசிப்பதாக ஐதீகம் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியே சாரதாதேவி என்பதால் இந்த கோவில் ஒரு பல்கலைக்கழகம் போன்றும் இயங்கி வந்துள்ளது.
இந்தியா பாக். பிரிவினையின் போது, இது பாக். எல்லைக்குள் சென்றுவிட்டது. காஷ்மீரி பண்டிட்களின் புனித யாத்திரை செல்லும் மூன்று பீடங்களில் இதுவும் ஒன்று. அந்த கோவிலும் சிதிலமுற்று ஒரே ஒரு சுவருடன் நின்றதை பெரும் வேதனையுடன் சுதந்திரத்திற்குப் பின் (பிரிவினை, 370ன் விளைவு) இந்தியர்கள் கண்டு வந்தனர்.
இத்தனை ஆண்டுகள் கழித்து, இதோ விமோசனம்! அந்த கோவிலுக்கு 10கிமீ தொலைவில் இந்திய எல்லையில் உள்ள ‘டீட்வால்’ எனும் கிராமத்தில், 3500 சதுர அடியில், சாரதாம்பாளுக்கு சிருங்கேரி பீடத்தின் சார்பில் ஆதிசங்கரர் நிறுவியபடியே நான்கு வாயில்களுடன் கோவிலைக் கட்டித் தரும் பொறுப்பை ஏற்று, பஞ்சலோக சிலையையும் வழங்கி உள்ளது சிருங்கேரி மடம்.
கடந்த ஜூன் 5, 2023 ம் தேதி அனைத்து திருப்பணிகளும் நிறைவடைந்து கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்று நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கண்ணா இரண்டு லட்டு திங்க ஆசையானு?!!? லட்டுக்கு பேர் போன நம் திருப்பதி பாலாஜியின் கோவிலும் ஜம்முவில் ஜம்மென்று கடந்த ஜூன் 8 அன்று திறக்கப்பட்டுள்ளது. இது 62 ஏக்கர் பரப்பளவில், 30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது TTD ஆந்திராவிற்கு வெளியே கட்டிய ஆறாவது கோவிலாகும். திருப்பதி பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து நடைமுறைகளும் இங்கு பின்பற்றப்படும் என TTD தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் என்றாலே அது குறிப்பிட்ட மதத்தவரின் பூமி, பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பூமி, உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று அஞ்சி நடுங்கி இருந்த காலம் மாறி, இன்று காஷ்மீரம் அதன் தொன்மையான, மென்மையான தன்மையை மீட்டெடுத்திருக்கிறது. இதனை கனவில் கூட நினைத்துப் பார்க்க நாம் பயந்த காலங்களும் உண்டு.
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்
என்ற பாரதி ஞானதிருஷ்டியில் கனித்த ஞானி நம் மோடி அவர்கள். காஷ்மீரத்து மக்களின் அவலநிலையை போக்கி, நம்மைப் போலவே அவர்களும் மகிழ்ச்சியும், நிம்மதியுமாய் வாழ வழி செய்து அனைவருக்குமான தேசத்தலைவன் என்பதை நிரூபித்து விட்டார்.
– சுமதி மேகவர்ணம்பிள்ளை