சட்டம் அனுமதித்த ‘கருணை மனு’ வை அளித்த சாவர்க்கரை மன்னிப்புக் கடிதம் கொடுத்தார், மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் என பொய் பிரச்சாரம் செய்துவரும் திராவிட மாடல் பிரமுகர்களுக்கு செருப்படி கொடுப்பது போல, பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர் ஈவேரா’ என்று மறைக்கப்பட்ட ஓர் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன்.
ஸ்ரீநிவாசனின் பதிவிக்கு ஆதாரம் கேட்ட சு.ப.வீரபாண்டியனுக்கு பாஜக ஓ.பி.சி அணி மாநில செயலாளர் வீர திருநாவுக்கரசு ஆதாரத்தை வெளியிட்டு நெத்தியடி கொடுத்துள்ளார்.
கடந்த 27.05.2023 அன்று விடுதலைப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பிறந்த நாள் கருத்தரங்கம் சென்னை திருவல்லிகேணி ஸ்ரீ வியாசராஜா மடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கத்தில் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன் வெள்ளைக்காரனிடம் ’ஈ.வே.ரா மன்னிப்புக் கேட்டார் என்ற உண்மையை பொது வெளியில் போட்டுடைத்தார்’ அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இது பற்றி அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாஜக ஓ.பி.சி அணி மாநில பொதுச் செயலாளர் வீர திருநாவுக்கரசு தெரிவித்ததாவது:
‘இதுவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி., அண்ணல் அம்பேத்கர், சரோஜினி நாயுடு மற்றும் வீர சாவர்க்கர் ஆகிய தேசியத் தலைவர்கள் குறித்துக் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறேன்.
வீர சாவர்க்கர் கருத்தரங்கில் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் அவர்கள், பிரிட்டிஷாரிடம் ‘ஈவெரா மன்னிப்புக் கேட்டார்’ எனும் உண்மை வரலாற்றை எடுத்துரைத்தார்.
”கருத்தரங்கின் வீடியோவைப் பார்த்த திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள், ‘ஈவெரா மன்னிப்புக் கேட்டதற்கான ஆதாரம் எங்கிருக்கிறது?’ என்று பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு ஃபோன் பண்ணி கேட்டிருக்கிறார்.
அதற்கு மறைந்த நெல்லை கண்ணனின் கானொளி ஒன்றை போராசிரியர் ஸ்ரீநிவாசன் குறிப்பிட, சுப.வீ அதனை ஏற்கவில்லை. எனவே சுப.வீக்கு மற்றொரு ஆதாரம் அனுப்பப்பட்டது.
கவிஞர் கருணானந்தம் அவர்கள் ஈவெராவோடு பல வருடங்கள் இருந்தவர். அவர் “தந்தை பெரியார் – முழுமுதல் வாழ்க்கை வரலாறு” என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் தான் ஈவெரா குறித்து முதன் முதலில் எழுதப்பட்ட முழு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் என்று சொல்லப்படுகிறது. அந்தப் புத்தகத்தின் 101, 102 & 103 ஆகிய பக்கங்களில் ஈவெரா மன்னிப்புக் கேட்டதற்கான விசயங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பக்கங்கள் புகைப்படம் எடுத்து அனுப்பப்பட்டது” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு வாசகர்களுக்காக இதோ அந்தப் பக்கங்கள் சாவர்க்கர் கொடுத்தது கருணை மனு. ஆனால் ஈ.வே.ரா வும், ஜீவாவும் கொடுத்தது மன்னிப்புக் கடிதம். இதை திராவிட பகுத்தறிவுப் பகலவர்கள் புரிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது!