செந்தில் பாலாஜி விசயத்தில் கடுகளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை, அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சியும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று 14.06.2023 பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் செந்தில் பாலாஜி. பணம் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட அருள்மணி என்பவர் 2018ல் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார்.
இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. 2019ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2022ல் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வீடு, தலைமைச் செயலகம், அலுவலகங்களில் சோதனை நடந்தது எப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகும்? இதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையின் போது, முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லி இருந்தார் என யோசிக்கவும்?
இதில் எந்த வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்? அதனை முதல்வர் விளக்குவாரா? அமலாக்கத்துறையிடம் ஆதாரங்கள் இருந்ததால் தான் தலைமை செயலகத்தில் உள்ள அறையில் சோதனை நடத்தப்பட்டது.
உச்சநீதிமன்றமே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க இரண்டு முறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றமே குற்றவாளி எனச் சொன்னவரை ஓமந்தூராரில் போய் முதல்வர் சந்திப்பது நியாயமா?
செந்தில் பாலாஜி விசயத்தில் கடுகளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை, இது அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சியும் இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு பல இடங்களில் தெளிவாக சொல்லி இருக்கிறது.
மற்ற மாநில வழக்குகளுக்கும், இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு வித்தியாசமானது. அமலாக்கத்துறை மத்திய அரசின் கீழ் வந்தாலும், அது தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது; அதனை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்த்தது கண்டிக்கத்தக்கது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முதல்வரும், அமைச்சர்களும் உணர வேண்டும். விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத்துறை சட்டப்படி அறிவிப்பார்கள். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிற்காது”
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து எது உண்மையோ அதைத் தான் நான் கூறினேன். அதிமுகவினர் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் போல நானும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை எனக் கூறினார்.