அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்

சட்ட விரோத பணபரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.

தமிழகத்தில் சாராய அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதில் நடந்த முறைகேடு, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 26.05.2023 அன்று சோதனையில் ஈடுபட்டனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கில் நேற்று 13.06.2023 அன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் பங்களா, மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் காலை 8:30க்கு துவங்கி நள்ளிரவு 1:30 மணி வரை என 18 மணி நேர சோதனையை நிறைவு செய்தனர்.

பின் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை  கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள வீட்டிலிருந்து கைது செய்து விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அவரை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளும், சோதனைகளும்..

கடந்த 2016 டிச.10: அரசு வேலை வாங்கி தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார்

2018 பிப்.12: செந்தில் பாலாஜி, அவர் சகோதரர் அசோக் குமார் உள்பட 4 பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு வழக்கு

2018 மார்ச் 18: செந்தில் பாலாஜியிடம் மத்தியக் குற்றப்பிரிவு விசாரணை

2019 ஆகஸ்ட் 8: சட்ட விரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்கு

2019 செப்டம்பர் 17: செந்தில் பாலாஜியை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

2020 ஜன 21 : செந்தில்பாலாஜி வீடு உள்பட 14 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரணை.

2022 அக். 31: செந்தில் பாலாஜி மீதான வழ்க்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

2023 மே 16 : செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

2023 ஜூன் 13 செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.

மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

இது சம்மந்தமாக 14.06.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: “அமலாக்காத்துறை என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு; சட்டத்திற்குட்பட்டு அமலாக்கத்துறை செயல்படுகிறது. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெற்றது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. சட்டப்படி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது”. எனக் கூறினார்.

இது தொடர்பாக ஸ்டாலின் 14.06.2023 அன்று வெளியிட்ட அறிக்கை: சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு சென்று, தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என, தெரியவில்லை. தலைமை செயலகத்திலும் ‘ரெய்டு’ நடத்துவோம் எனக் காட்டவோ அல்லது அதை காட்டி மிரட்டவோ விரும்புகின்றனரா என தெரியவில்லை. இவை எல்லாமே விசாரணை அமைப்பானது, அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்து காட்டுகிறது.

ஆனால் இதே ஸ்டாலின் அதிமுக அரசில் ராம் மோகன்ராவ் மீதான வழக்கில் தலைமை செயலர் அலுவலகத்தில் நடந்த ரெய்டில்,

“ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில்,‛ரெய்டு’கள் நடைபெற்று வருகின்றன, தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

தலைமைச்செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது. தமிழக நலன்களைப் புறக்கணித்து தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படும் அ.தி.மு.க., அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,

ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும், ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக்கூடாது. ராம்மோகனராவ் ராஜினாமா செய்ய வேண்டும். புதிய தலைமை செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்து வரும் சமூக வலைதளவாசிகள் அப்போது ஒன்று, இப்போது ஒன்று என ஸ்டாலின் பேசுவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top