நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
’பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், 30 நாட்களுக்குள் தங்களுடைய கருத்தை சட்ட ஆணைய உறுப்பினர் செயலர் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பலாம் அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலே தெரிவிக்கலாம். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary-Ici@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பதிவு செய்யலாம்’ என, நேற்று முன்தினம் 14.06.2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சட்ட ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது ஆரம்ப காலம் முதல் அனைத்துத் தேர்தல் அறிக்கைகளிலும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது ஆகியவற்றை தொடர்ந்து கூறி வருகிறது பாஜக. இந்த வாக்குறுதிகளில் பொது சிவில் சட்டம் தற்போது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதை 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்துவதற்கு நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்பது பாஜகவின் முக்கியமான தேர்தல் அறிவிப்பாகும். சமீபத்தில் நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலிலும் இது குறிப்பிடப்பட்டிருந்தது.
உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது.
லோக்சபாவுக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் துவங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், கடந்தாண்டு, அக்.,13ல் தாக்கல் செய்த பதில் மனுவில், மத்திய சட்ட அமைச்சகம் கூறியுள்ளதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின், 44வது பிரிவு, பொது சிவில் சட்டம் குறித்து குறிப்பிடுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளது போல், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என்ற நோக்கத்தை அடைவதை, இந்தச் சட்டப் பிரிவு உறுதி செய்கிறது.
இந்த சட்டத்தின்படி, நாடு முழுதும், எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைத்து மக்களுக்குமான பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மதம் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், திருமணம், சொத்து உள்ளிட்டவற்றில் விதவிதமான தனிநபர் சட்டங்களை பின்பற்றுவது, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது.
பொது சிவில் சட்டம் என்பது, திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குடும்ப சொத்துரிமை, தத்தெடுப்பது என, பல தனிநபர் சட்டங்களில் உள்ளவற்றை குறிக்கிறது.
தற்போது பல்வேறு தனிநபர் சட்டங்களில் உள்ளவற்றை மாற்றி, அனைத்து மக்களையும் பொதுவான தளத்தில் இணைப்பதை, 44வது சட்டப் பிரிவு குறிப்பிடுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாட்டுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதா, வேண்டாமா என்பது குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய பார்லிமென்டே முடிவு செய்யும்.
இதன் அடிப்படையிலேயே, தற்போதுள்ள 22வது சட்ட ஆணையம் வாயிலாக, பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்படும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மதசார்பற்ற இந்தியா அமைய பொது சிவில் சட்டம் தேவை. இந்தியா ஒன்றுபட்ட வலிமையான நாடாக திகழ ஒரே நாடு ஒரே சட்டம் எனும் தாரக மந்திரம் மெய்ப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஒரே விதமான சட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய காலம் உருவாகியுள்ளது. பிறப்பால் அனைவரும் இந்தியர் எனும் போது சட்டமும் அனைவருக்கும் ஒன்றாக தானே இருக்க வேண்டும்.
இந்தியர்கள் அனைவருக்குமானதாக கிரிமினல் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது பொது சிவில் சட்டமும் நடைமுறைபடுத்த பட வேண்டும் என்பது தானே நியாயம்! வாசகர்கள் மறக்காமல் தங்கள் கருத்தை சட்ட ஆணையத்திற்கு அனுப்பவேண்டும் என்பது நமது வேண்டுகோள்!