2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு ‘கீதா பிரஸ்’ பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை குறைந்த விலையில் வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இயங்கும் கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விருது வழங்கப்படுவது சம்மந்தமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கீதா பிரஸ் 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ’கீதா பிரஸ்’ உலகின் மிகப் பெரிய பதிப்பகங்களில் ஒன்று. இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமான புத்தகங்களை பல மொழிகளில் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.
மஹாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகம், பொருளாதார மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனி நபர் மற்றும் அமைப்புகளுக்கு, மத்திய அரசால் காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்துள்ளது.
பிரதமர் அலுவலகம் இந்த விருது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் “கீதா பதிப்பகம் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடுகிறது. காந்திய கொள்கைகளான அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் கீதா பதிப்பகத்தின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்கிறார். கீதா பதிப்பகம் நிறுவப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்த நிலையில், காந்தி அமைதி விருது வழங்கப்படுவது, சமூக சேவையில் அந்நிறுவனம் ஆற்றி வரும் பணிக்கான அங்கீகாரம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விருது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், கடந்த நூறு ஆண்டுகளில் மக்களிடையே சமூக, கலாசார மாற்றத்தை ஏற்படுத்தியதில் கீதா பிரஸ் குறிப்பிடத்தகுந்த பங்கை ஆற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: கீதா பிரஸ் பதிப்பகத்தின் நிகரற்ற பங்களிப்பால் இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய சனாதன கலாச்சாரம் தொடர்பான புனித நூல்களை இன்றும் எளிதாகப் படிக்க முடிகிறது என சொல்லியிருக்கிறார். 2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசை கீதா பிரஸ் நிறுவனத்துக்கு வழங்குவது அதன் பணிக்கு அளிக்கப்படும் மரியாதை என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்: கீதா பதிப்பகம், நம் நாட்டின் கலாசாரம், நெறிமுறைகள், ஹிந்து மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையது. மிகத் தரமான இலக்கிய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் பணியை இந்த பதிப்பகம் செய்து வருகிறது.
இதை விமர்சிப்பவர்கள் யார் என நன்றாகத் தெரியும். முஸ்லிம் லீக்கை, மதச் சார்பற்ற அமைப்பு என கூறியவர்கள்தான், இதை எதிர்க்கின்றனர்; வேறு யாரும் எதிர்க்கவில்லை’ எனக் கூறினார்.
பாஜக தலைவர் மீனாட்சி லேகி: இந்தியர்களின் நம்பிக்கையையும் பெருமையையும் தக்கவைக்க உதவிய வெளியீடுகளை காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அது எந்தப் பக்கம் நிற்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா: அனைத்து இந்துக்கள் மீதும் காங்கிரஸ் வெறுப்பு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ”இந்தியாவின் நாகரீக மதிப்பை காங்கிரஸ் தாக்குகிறது. கர்நாடகாவில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவின் நாகரீக விழுமியங்கள் மற்றும் செழுமையான மரபுகளுக்கு எதிரான ஒரு போரை, காங்கிரஸ் இப்போது வெளிப்படையாகக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது” என்றும் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
கீதா பதிப்பகம்: ’இந்த விருது பெருவது மாபெரும் கவுரவம் என தெரிவித்துள்ள கீதா பதிப்பகம், நன்கொடை வாங்குவதில்லை என்ற தங்கள் கொள்கையின் காரணமாக 1 கோடி ரூபாய் பணப்பரிசை ஏற்பதில்லை’ என அறிவித்துள்ளது.
இது வரை இந்த விருதை நெல்சன் மண்டேலா, டெஸ்மண்ட் டூடு போன்ற பிற நாட்டை சேர்ந்தவர்களும், கிராமீன் வங்கி, இஸ்ரோ போன்ற அமைப்புகளும் பெற்றுள்ளன. காங்கிரஸ் ஆட்சியின் போது 2006ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை இந்த விருது வழங்கப்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பிரபலமான பதிப்பகத்திற்கு மத்திய அரசு விருது வழங்குவது இடதுசாரியினருக்கு வயிற்றெரிச்சலை உருவாக்கியுள்ளது. இதை போல் பத்ம விருதுகள் உட்பட பல விருதுகள் பாமரரையும், தகுதியானவர்களையும் தேடிச் செல்கிறது என்றால் அதற்கு மத்திய நரேந்திர மோடி அரசுதான் காரணம்.
இதை எல்லாம் சகித்து கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியும், இடது சாரிகளும் விரக்தி அடைந்து பாஜக அரசின் மீது எப்படி வன்மத்தை கக்குவது என்று தெரியாமல் ஏதேதோ புலம்பி வருகின்றனர்.