விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் எம்.பி., நவாஸ்கனிக்கும், திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியரை திமுக கட்சியினர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 17.06.2023 அன்று இராமநாதபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் கூட்டணி எம்.பி நவாஸ்கனி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, சாமாதானம் செய்ய முயன்ற மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை தி மு க வினர் கீழே தள்ளி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்கூட்டியே வந்ததால் பகல் 2.45 மணிக்கு விழா தொடங்கியது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அடுத்தடுத்து செல்வதற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் அவர் மாவட்ட ஆட்சியரிடம் அவசரம் காட்டிய சூழலில், அங்கு 3- மணிக்கு வந்த எம்பி நவாஸ்கனி, நான் வருவதற்கு முன்பே, ஏன் விழாவை தொடங்கினீர்கள் என அமைச்சரிடம் கேட்க அதற்கு, எம்பி முன்கூட்டியே விழாவிற்கு வர வேண்டும். சும்மா போயா அங்கிட்டு என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்ததும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, இந்த மோதலில் சாமாதனம் பேச முயற்சி செய்த கலெக்டர், எம்.பி நாவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு மற்றும் கட்சிக்காரர்களால் தள்ளிவிடப்பட்டார்.
கலெக்டரை தள்ளிவிட்டதாக நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளரான சாயல்குடியை சேர்ந்த விஜயராமுவை கடந்த 18.06.2023 அன்று போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையில் மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அரசு நிகழ்ச்சியில் நேருக்கு நேர் அமைச்சரும், எம்.பி.யும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. திமுக அரசு மக்கள் பணி செய்யும் லட்சணம் இது தானா என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, ஆளுநருடன் அமைச்சர் மோதல் என ஏற்கனவே கடும் சிக்கலுக்குள் சிக்கி தவித்து, தூக்கத்தை தொலைத்தவர் முதல்வர் ஸ்டாலின். அப்படி இருக்கும் போது கூட்டணி கட்சி எம்.பி நவாஸ்கனி மீது திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் நேருக்கு நேர் மேடையில் மோதிக் கொண்டது ராஜகண்ணப்பன் மீது ஸ்டாலினின் கோபத்தை அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ராஜகண்ணப்பனுக்கு துறை மாற்றம் அல்லது பதவி பறிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.