தமிழகத்தில், திமுக அரசை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது, அரசியல் விமர்சகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட மாடல் அரசு கடந்த, 2021ல், ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில், திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், பாஜக – ஐ.டி., பிரிவு பொறுப்பாளர் சரவணகுமார் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு அக்டோபரில் ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, யு டியூபர் தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
முகநுால், ‘டுவிட்டர், யு- டியூப்’ போன்ற சமூக ஊடகங்களில், தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து வரும் மாரிதாஸ், சவுக்கு சங்கர், கிஷோர் கே சுவாமி, சாட்டை துரைமுருகன், கோபிநாத், பிரதீப், சரவணபிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்ததாக, ஜான் ரவி என்பவரை, குஜராத் வரை சென்று தமிழக காவல்துறை கைது செய்தது.
பாஜக நிர்வாகிகள் கல்யாணராமன், செல்வகுமார், சவுதாமணி, ஹிந்து முன்னணி நிர்வாகியும், திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனருமான கனல் கண்ணன், நாகை அ.ம.மு.க., நிர்வாகி செந்தில், புதுக்கோட்டை நாம் தமிழர் பிரமுகர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, ஈரோடு அ.தி.மு.க., நிர்வாகி கவுதம், திண்டுக்கல் அ.தி.மு.க., – ஐ.டி., பிரிவு நிர்வாகி கார்த்திக் என, கடந்த இரண்டு ஆண்டுகளில், 50 பேர் அவதுாறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.