”உலக நாடுகள் இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்வதால், அந்த நாடுகளின் மாற்று இடமாக எங்கள் நாட்டை மாற்றுவதாக கூற முடியாது. இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகவும் உயரிய, ஆழமான, பரந்த இடத்தைப் பெறுவதற்கான தகுதி உள்ளது. அதையே செயல்படுத்தி வருகிறோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
முதல் முறையாக அரசு முறை பயணமாக அவர் அமெரிக்காவுக்கு 20.06.2023 அன்று புறப்பட்டார். அங்கு, 25.06.2023 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு என, ஒரு நொடியையும் வீணாக்காமல் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அமெரிக்காவுக்கு புறப்படும் முன், அந்நாட்டைச் சேர்ந்த, ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு மோடி விரிவான பேட்டி அளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:
”கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அதிகளவில் செலவிட்டு வருகிறது.
இங்கு பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகள் செய்கின்றன. இதன் வாயிலாக உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது.
இதனால் மற்றொரு நாட்டின் மாற்று இடமாக இந்தியா மாறியுள்ளது என்று கூற முடியாது.
உலக அரங்கில், மிகவும் உயரிய, ஆழமான, விரிவான, பரந்த இடத்தை பெறுவதற்கான தகுதிகள் அனைத்தும் இந்தியாவுக்கு உள்ளன. அதை உணர்த்தும் வகையிலேயே, இந்த முதலீடுகள் அமைந்துள்ளன.
இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு, பரஸ்பரம் அதீத நம்பிக்கை, மற்றவரை மதித்து நடப்பதாலேயே வலுவாக உள்ளது. இந்த அமெரிக்க பயணம் அதை மேலும் வலுவானதாக்கும்.
சீனாவுடனான உறவு மீண்டும் மேம்படுவதற்கு, எல்லையில் அமைதி நிலவுவது மிகவும் முக்கியமாகும். ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் நிலப்பரப்பை மற்ற நாடு மதித்து நடக்க வேண்டும்.
எந்த பிரச்னைக்கும் பேச்சு வாயிலாகவே தீர்வு காண வேண்டும் என்பதில் எங்கள் அரசு முழு நம்பிக்கை வைத்துள்ளது.
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டோம்.
சுதந்திரத்துக்குப் பின் பிறந்த, நாட்டின் முதல் பிரதமராக உள்ளேன். அதனால் தான், என்னுடைய செயல்கள், சிந்தனைகள் அனைத்தும் நாட்டின் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
அதுவே சிறப்பாக சேவை செய்ய வைக்கிறது. நான் இந்த நாட்டை என்னுடைய நாடாக கூறி வருகிறேன்.
உக்ரைன் மீதான ரஷ்யா போர் விவகாரத்தில் நாங்கள் நடுநிலை வகிப்பதாக கூறுகின்றனர்; அது தவறு. நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம்.
சர்வதேச சட்டங்கள், நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
தற்போது உலகெங்கும் உள்ள வன்முறை, பயங்கரவாதம், மறைமுக போர், நாட்டை விரிவுபடுத்துவது போன்ற பிரச்னைகள், சர்வதேச அமைப்புகள் சரியாக இல்லை என்பதாலேயே ஏற்படுகிறது.
தற்போதுள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில், இந்த உலகின் குரல் முழுதும் ஒலிக்கிறதா?
இதில், ஆப்ரிக்க நாடுகளுக்கு இடம் இல்லை. உலகுக்கு அமைதியை போதிக்கும், மிகப் பெரும் பொருளாதார நாடான இந்தியாவுக்கு இதில் இடம் இல்லை.
இதனால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை” இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: அதிபர் ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடனின் சிறப்பு அழைப்பை ஏற்று, முதல் முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறேன். இந்தப் பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, யோகாவுக்கென சர்வதேச தினம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, நியூயார்க்கில் ஐ.நா., சபை வளாகத்தில் நடக்கும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்க உள்ளேன். இந்தியா, அமெரிக்கா இடையேயான ஆழமான நட்பு, மேலும் வலுவடையும் வகையில் அமைந்துள்ளதால், இந்தப் பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கும் அமெரிக்க சிந்தனையாளர்கள்:
அமெரிக்க பயணத்தில் முதலில் நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, அங்கு, 20க்கும் மேற்பட்ட சிந்தனையாளர்களை சந்தித்து உரையாட உள்ளார். பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க், விஞ்ஞானி நீல் டிகிரீஸ் டைசன், நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் பால் ரோமர், எழுத்தாளர் நிகோலஸ் நசீப் தலேப், முதலீட்டு நிபுணர் ரே டாலியோ உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.