திருவாரூரில் கருணாநிதி கோட்டம் சுமார் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இதை திறக்க பீகார் முதல்வர் வர இருந்த நிலையில் அவர் திடீர் என பயணத்தை ‘கேன்சல்’ செய்ததால், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவாரூரில் நேற்று 20.06.2023 அன்று ‘கருணாநிதி கோட்டம்’ திறப்பு விழாவில் பங்கேற்பதை, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தவிர்த்து விட்டார். முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று, இவ்விழாவுக்கு வர சம்மதித்திருந்த நிதிஷ், கடைசி நேரத்தில், ‘உடல்நிலை சரியில்லை’ எனக் கூறி நிகழ்ச்சியை ’கேன்சல்’ செய்து விட்டார். இதனால் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வரும் 23.06.2023 அன்று நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில், நிதிஷ் ஸ்டாலினின் அழைப்பை புறக்கணித்ததற்கு பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜூன் 3 அன்று ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக, கருணாநிதி 100, ஆண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, சென்னையில் 240 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, கருணாநிதி நுாற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையை, கடந்த 5.06.2023 அன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு திறந்து வைப்பார் என, அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினத்தில் ஜனாதிபதியால் வர முடியாததால், விழா 15.06.2023 அன்று தேதி மாற்றம் செய்யப்பட்டது. அப்போதும் அவர் வராததால், மருத்துவமனையை, ஸ்டாலினே திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று, திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடந்தது.
நேற்று 21.06.2023 அன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார், கருணாநிதி கோட்டத்தை திறந்து வைப்பார் என்றும், அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பார் என்றும், அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிதிஷ்குமார் வரவில்லை. கடைசி நேரத்தில், உடல் நிலை சரியில்லை எனக் கூறி, அவர் விழாவுக்கு வர மறுத்தது, திமுகவினரிடம் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடல் நிலை சரியில்லை என நிதிஷ் தரப்பில் சொல்லப்பட்டாலும், அவர் வராததற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை
கடந்த மார்ச் மாதம், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு வந்து சென்றதும், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. ‘தமிழகத்தில், நம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுகின்றனர். அதை கண்டிக்காமல், அம்மாநில முதல்வர் ஸ்டாலினுடன், நிதிஷ்குமார் நட்பு பாராட்டுகிறார்’ என, பீஹாரில் மக்கள் குற்றம் சாட்டினர்.
இது, அம்மாநில மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், பீஹாரில் ஸ்டாலின் பற்றிய நல்ல கருத்து இல்லை என்றும், ஹிந்தியை எதிர்க்கும் திமுக போன்ற அரசியல்வாதிகளை அம்மாநில மக்கள் சந்தேகத்தோடு தான் பார்க்கின்றனர் என்றும், அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி
பீஹாரை சேர்ந்தவரான தமிழக கவர்னர் ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் உச்சத்தில் உள்ளது. கவர்னரை, தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சிப்பதையும், பீகார் மக்கள் ரசிக்கவில்லை.
அதற்கு துாபம் போடுவது போல், இங்கு இரு தினங்களுக்கு முன், கும்பகோணத்தில் கருணாநிதி நுாற்றாண்டு தின பொதுக்கூட்டத்தில், அமைச்சர் வேலு பேசுகையில், ‘தமிழகத்தில் இருந்து யாரும், பீஹாருக்கு வேலை தேடி செல்வதில்லை. பீஹாரில் இருந்து தான் பலர் இங்கு வேலை தேடி வருகின்றனர். கவர்னர் கூட பீஹாரில் இருந்துதான் வந்துள்ளார்’ என, கவர்னர் ரவியை விமர்சித்தார்.
பிரதமர் வேட்பாளர்
பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது நிதிஷ் குமாரின் விருப்பமாக உள்ளது. வரும் 23ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் அது பற்றி முடிவெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதற்கு ஸ்டாலின் பிடிகொடுக்கவில்லை. தேர்தல் முடிந்த பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என, ஸ்டாலின் கூறிவிட்டார். இது நிதிஷ்க்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழகம் சென்று ஸ்டாலினுடன் நட்பு பாராட்டினால் உள்ளூர் அரசியலில் சிக்கல் வருவதோடு, பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தன் அதிருப்தியை தெரிவிக்கவும் சந்தர்ப்பமாக அமையும் என கருதி நிதிஷ்குமார் தன் வருகையை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் ஸ்டாலின் கூட்டணி அமைக்க வேண்டும், ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்ற குரல்களுக்கு இடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பம் வடஇந்தியர்கள் இடையே ஏற்பட்டுள்ளது .
அழைக்காதது ஏன்?
மேலும் இவ்விழாவுக்கு, ராகுல், கார்கே, சித்தராமையாவை அழைக்காமல், திமுக புறக்கணித்ததற்கு, இரு காரணங்கள் கூறப்படுகின்றன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி ஏற்பு விழாவில், 19 தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கையை உயர்த்தி போட்டோவுக்கு, ‘போஸ்’ கொடுத்தனர். அப்போது ராகுல், பிரியங்காவுக்கு நடுவில் நின்றிருந்த ஸ்டாலின், திடீரென பின்னுக்கு தள்ளப்பட்டார். அந்த கோபத்தில், பதவி ஏற்பு விழா முடிந்ததும், காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, ஸ்டாலின் வெளியேறினார். நட்சத்திரஹோட்டலில், ராகுல் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியையும், ஸ்டாலின் புறக்கணித்தார். அந்த சம்பவம் காரணமாகதான், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு, காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு தரவில்லை.
அதேபோல், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு அணுகுமுறையும், ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் பிறந்த நாளை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் ஜனநாயக பண்பை காப்பாற்ற, நாம் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்; ஒன்றாக அணிவகுப்போம்’ என, குறிப்பிட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், ராகுலை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்தார். தற்போது, ‘ராகுலுடன் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்’ என்று மட்டுமே கூறியுள்ளார்.