திமுக அரசு தரம் தாழ்ந்து செயல்படுகிறது

”அமலாக்கத் துறைக்கு தமிழக மனித உரிமைகள் ஆணையம் அளித்த நோட்டீஸ், ஒரு பொருட்டே அல்ல. திமுக அரசு தரம் தாழ்ந்து செயல்படுகிறது,” என, தலைவர் அண்ணாமலை கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பாஜக சார்பில் சர்வதேச யோகா தினவிழா 21.06.2023 அன்று நடந்தது. இதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணமலை, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

பின்னர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது: “பிரதமரின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை கூறி, தமிழகத்தில், 41 பொதுக்கூட்டங்களுக்கு மேல் நடத்தியுள்ளோம். தாம்பரம் பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், மூன்று மாதங்களாக பாஜகவை பற்றியே பேசுகிறார். அவரது ஆட்சி மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளதை அவரும் அறிவார். மக்களும் திமுக ஆட்சியை ஏற்க தயாரில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லாததை மறைக்க, மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு கூறுகிறார்.

அதற்கு, திருவாரூர் நிகழ்ச்சியே சாட்சி. அந்த நிகழ்விற்கு, ஜனாதிபதி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வருவதாக இருந்தும் வரவில்லை.

கருணாநிதி பேரன் வயதை ஒத்த தேஜஸ்வி யாதவ், கருணாநிதி கோட்டத்தை திறந்து வைத்தார்.  அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பது நிதிஷ்குமார் வராததில் இருந்தே நமக்கு தெரிகிறது. எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது அவர்களின் கனவாக மட்டுமே இருக்கும்.

பாஜக எதிர்ப்பு என்பது, அரசியல்வாதிகளுக்கு பேசு பொருளாகத்தான் இருக்கும். மக்கள், பாஜகவை விரும்புகின்றனர்.

மூன்றாம் முறையும் மோடி பிரதமராவதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில், 39 எம்.பி.,க்கள் உட்பட, நாடு முழுதும், பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.

செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் உள்ளதால், அவர் பற்றி பேசுவது மரபு அல்ல. ஆனாலும், அவரது கைது முதல் நடந்து வரும் நிகழ்வுகள், நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

தமிழக மனித உரிமைகள் ஆணையம், தி.மு.க.,வின் விரிவாக்க கிளையாக உள்ளது.  நடுநிலையாக, சுதந்திரமாக செயல்படவில்லை. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில், அமலாக்கத் துறைக்கு, ‘நோட்டீஸ்’ அளித்து உள்ளது.

மத்திய அரசு அதிகாரிகள், அவர்களின் கடமையை செய்ய, அரசு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். எனவே, அமலாக்கத் துறைக்கு, தமிழக மனித உரிமைகள் ஆணையம் அளித்த நோட்டீஸ், ஒரு பொருட்டே அல்ல. திமுக அரசு தரம் தாழ்ந்து செயல்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

*********

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top