அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தில் ”யோகாவிற்கு காப்புரிமை, பதிப்புரிமை கிடையாது என பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 9வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25.06.2023 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு என, அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இடைவிடாது பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், நியூயார்க் நகரின் ஐ.நா தலைமையகத்தில் நேற்று 21.06.2023 நடந்த 9-வது ஆண்டு சர்வதேச யோகா நிகழ்ச்சியில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபரின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோரும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கலந்துகொண்டனர். ஐ.நா. சபை வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு உருவசிலைக்கு ஜோ பைடன், ஜில் பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி வணங்கினர்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் யோகா வல்லுநர்கள், பயிற்சியாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகா பயிற்சி மேற்கொண்டார். பிரதமர் மோடி வெள்ளை நிற டி-ஷர்ட், வெள்ளை நிற பேன்ட் அணிந்து வந்திருந்தார். கைகளை கூப்பி, ‘நமஸ்தே’ என்று கூறி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ”யோகா இந்தியாவில் பிறந்தது. யோகா என்றால் ஒன்றுபடுவது. பல்வேறு நாட்டின் மக்கள் அனைவரையும் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். உங்கள் அனைவரையும் யோகா ஒருங்கிணைத்துள்ளது.
யோகாவை பிரபலப்படுத்த கடந்த 2014-ம் ஆண்டிலேயே திட்டமிட்டோம். அதை வெற்றிகரமாக செய்து வருகிறோம். யோகா என்பது வாழ்க்கையின் நெறிமுறை. இந்தியாவின் மற்ற பாரம்பரியம் போலவே, யோகாவும் சக்திவாய்ந்தது. காப்புரிமைகள், பதிப்புரிமை இல்லாதது. உங்கள் வயது, பாலினம், உடல்நிலைக்கு ஏற்றதாக யோகா உள்ளது.
அனைத்து இன, மதங்களுக்கும் பொதுவானது யோகா. இது ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியா அளித்த பரிசு. அமைதியான உலகம், தூய்மையான, பசுமையான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க யோகாவின் சக்தியை பயன்படுத்துவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நனவாக்க ஒன்றிணைவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஐ.நா. சபைத் தலைவர் கசபா கொரேஷி, ஹாலிவுட் நடிகர்கள் ரிச்சர்ட் கெரே, எரிக் ஆடம்ஸ், கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ், இந்திய உணவுக்கலை நிபுணர் விகாஸ் கன்னா, ஜெய் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலக யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவின் அழைப்பின் பேரில் 180-க்கும் மேற்பட்டநாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது. 2014-ம் ஆண்டு ஐ.நா. சபையில் யோகா தினத்துக்கான முன்மொழிவு வந்தபோது, ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியர்கள் புதிய யோசனைகளை வரவேற்று, அவற்றை பாதுகாத்து, நாட்டின் செழுமையான பன்முக தன்மையை கொண்டாடி உள்ளனர். அதுபோன்ற உணர்வுகளை யோகா வலுப்படுத்துவதுடன், உள்நோக்கு பார்வையை விரிவுபடுத்தி, ஒற்றுமை உணர்வுடன் நம்மை இணைக்கிறது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கின்னஸ் சாதனை: ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
அதிக அளவிலான நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஒரே இடத்தில் திரண்டு யோகா செய்ததால் இந்த நிகழ்ச்சி ’கின்ன்ஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.