தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்என் ரவி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யவும், செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனாலும் கடந்த 16ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டு, அரசாணையையும் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி இன்று 29.06.2023 அன்று வெளியிட்ட அறிக்கையில்: ”தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜி. சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கியதால் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.