கடலூர் பெண்ணாடத்தில் தூய்மை பணியாளர் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ததால் மரணமடைந்தது தொடர்பாக பதிலளிக்க தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தூய்மை பணியாளாரை கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சாக்கடையில் இருந்த கழிவுகளை அகற்ற இறக்கி விட்டார். இந்நிலையில் தூய்மைபணியாளர் ஒவ்வாமை காரணமாக ஒரிரு நாட்களில் மரணமடைந்தார்.
இது சம்மந்தமாக தேசிய தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் ம.வெங்கடேசன் அந்தப் புகைப் படத்தை பதிவிட்டிருந்தார். அதை மறுபதிவு செய்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது மதுரை கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு பின் விடுதலையும் செய்யப்பட்டார்.
தற்போது, தூய்மை பணியாளர் மரணம் அடைந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் ஜூன் 29 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், எஸ்.ஜி சூர்யா கைது சம்மந்தமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த புகாரின் பெயரில், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, கடலூர் கலெக்டர், போலீஸ் எஸ்.பி. உள்ளிட்டோர் பதிலளிக்கவும் தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.