ஒய்யார கொண்டையாம் தாழம்பூவு உள்ளார பார்த்தாலே ஈரும் பேணும் என்பதுதான் தமிழகத்தின் கல்வித் துறையின் நிலை. துவக்க கல்வி, நடுநிலை, மேல்நிலை தாண்டி உயர்கல்விக்கு உள்ளும் இன்று பின்தங்கிய நிலையை தொடர்ந்து காண முடிகிறது.
சமீபத்தில் வெளிவந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதம் நம்மை இன்னும் கவலைக்கு உள்ளாக்குகிறது. 26 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம், 10 கல்லூரிகளில் பூஜ்ஜியமாக தேர்ச்சி விகிதம் பதிவாகி இருப்பது நாம் உடனே கவனிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. 11 ஆம் 12-ம் வகுப்புகளுக்கு கொரோனா காலத்தில் தேர்வு வேண்டாம் என மாணவர்களுக்கு சாதகமாக பேசுவதாக நினைத்து அவர்களின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி போட்டுள்ளது. காரணம், இந்த திராவிட மாடல் அரசு. அதன் விளைவாக மாணவர்கள் தேர்வு இல்லை, அதனால் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால் எளிதாக அவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு, இவற்றால் ஏற்பட்ட அடிப்படை புரிதல் இல்லாத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சனையே இது. மேல்நிலைப் பள்ளியில் இருந்து இதனை சரி செய்ய வேண்டி உள்ளது.
கடந்த வருடம் போல் இந்த வருடமும் 1500 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. துவக்க பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி வரை மொத்தத்தில் 11 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த வகுப்புகளை மற்ற ஆசிரியர்கள் பகிர்ந்து வகுப்புக்கள் எடுக்கப் படுவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலமாக எழும் அடிப்படைப் பிரச்சனைதான் இன்று இந்த தேர்ச்சி விகிதத்தில் பிரதிபலிக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்வோம் என்றும் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வுகள் இனி நடத்தப்பட மாட்டாது எனவும் உறுதி கொடுத்து ஆசிரியர் சங்கங்களை திமுகவிற்காக ஓட்டு கேட்க ரோட்டில் இறக்கியதன் விளைவு இன்று மாணவர்கள் கல்லூரிகளில் பரிமளிக்க முடியாமல் அவதியுருவதை கண்கூடாக காண முடிகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்ந்த பல்கலைக்கழக வரிசையில் மத்திய அரசு தேர்வு செய்து அதற்கென 1000 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து ஆராய்ச்சியை மேம்படுத்த உதவுவதாக கூறிய பொழுது மத்திய அரசின் கீழ் இந்த பல்கலைக்கழகம் வந்து விடும் என்ற பொய்ச் செய்தியை பரப்பி அதனை ஏற்க மறுத்தது தமிழகம்.
அண்ணா பல்கலைக்கழகம் என்பது உயர் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டிய ஒரு பல்கலைக்கழகம். பொறியியல் துறையில் சாதிக்கும் ஒரு பல்கலைக்கழகம். ஆனால் அதற்கு கீழ் இருக்கும் 450-க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகளுக்கு சோதனைக்கு செல்வதும், ஆசிரியர் நியமனங்களை பரிசோதனை செய்வதிலும், தேர்வுகளை அறிவிப்பதிலும், தேர்வுத்தாள் திருத்துவதற்குரிய செயல்பாடுகளை செய்வதிலும் இந்த நேரம் செலவிடப்படுவதால் உயர்கல்வி ஆராய்ச்சிக்குரிய பங்களிப்பு குறைந்து வருகிறது. இதன் வெளிப்பாடு இந்த தேர்ச்சி விகிதம் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். பலமுறை நாம் இதைப் பற்றி விவாதித்தாலும் இரண்டு காதுகளையும் மூடிக்கொண்டு தமிழக அரசு தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த எந்தவிதமான முயற்சியும் எடுப்பதில்லை.
ஒவ்வொரு வருடமும் பொறியியல் கல்லூரி இருக்கைகள் 40 ஆயிரம், 50,000, 70 ஆயிரம் என காலியாக இருப்பது இதற்குச் சான்று. 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்க்கையும் 15 கல்லூரிகளுக்கும் மேலாக ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் சேர்க்கையே இல்லாமல் போவதும் இங்கு இருக்கக்கூடிய தரத்தின் வெளிப்பாடு.
போர்க்கால நடவடிக்கையாக தமிழக அரசனது 30 சதவிகிதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ள கல்லூரியில் தரத்தினை ஆய்வு செய்து அது குறைவாக இருக்கும் பட்சத்தில் மற்ற கல்லூரிகளுக்கு அந்த மாணவர்களை மாற்றுவதும், 50 சதவீதத்திற்கு மேலாக உள்ள கல்லூரிகளில் மீண்டும் ஒருமுறை தரத்தினை, ஆசிரியர்களின் கல்வித் தகுதியை, ஆசிரியர்களின் எண்ணிக்கையை எந்தவிதமான பாரபட்சமும் இன்றி உறுதி செய்தால் மட்டுமே பொறியியல் கல்லூரியின் தரம் உயர வாய்ப்புள்ளது.
இதற்கு அடிப்படை காரணமான பள்ளிக்கல்வித்துறையின் காலியிடங்களை உடனடியாக நிரப்புவதும், 11ம் 12 ஆம் வகுப்பு களுக்கு அந்தந்த ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிப்பதால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். கமிஷன், கரப்ஷன் , கலெக்ஷன் என்று செயல்படும் திராவிட மாடல் அரசு இவற்றை செய்யுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே!