ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி மணிப்பூர் சம்பவத்திற்கு ஆளும் காங்., எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, “நமது மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது பற்றி நாம் சுயபரிசோதனை செய்வது அவசியம்” என்றார். இது அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை ஆளும் காங்., அமைச்சரே கூறிய சம்பவம் நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியது. இதனால் தங்களது அரசுக்கு எதிராக குறை கூறிய அமைச்சர் குதாவை, அசோக் கெலாட் பதவி நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 24) காலை சட்டப்பேரவை நடைபெறுவதற்கு முன்பு, ‘‘தன்னிடம் இருக்கின்ற சிவப்பு டைரியில் சில ரகசியங்கள் உள்ளது. அதனை பேரவையில் தெரிவிப்பேன்’’ என்று சொல்லியிருந்தார்.
இதனால் முதலமைச்சர் அசோக் கெலாட் உட்பட பல அமைச்சர்கள் பீதியில் உறைந்தனர். அதன் பின் அவை கூடியதும், ராஜேந்திர சிங் குதா சிவப்பு டைரியுடன் பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷியுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பற்றி தனது அறைக்கு வந்து பேசுமாறு ஜோஷி கூறினார்.
சிறிது நேரத்திற்கு பின் பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஷாந்தி தரிவால் அருகே சென்று அவருடனும் டைரி பற்றி வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதன் பின்னரே பா.ஜ.க., எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று, சிவப்பு டைரி விவகாரம் பற்றிய பிரச்சினைகளை எழுப்பினர். அப்போது ராஜேந்தி சிங் குதா மீது காங்., எம்.எல்.ஏ.க்கள் பலர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த அவர் கண்ணீருடன் வெளியேறினார்.
இது பற்றி செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘பேரவையில் 50 காங்., எம்.எல்.ஏ.க்கள் தாக்கினர். எட்டி உதைத்தனர். அதன் பின்னர் அவர்கள் என்னை வெளியில் இழுத்து வந்து விட்டனர். பேரவை தலைவர் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. நான் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். என் மீது என்ன தவறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.
ஆளுர் காங்., அரசுக்கு எதிரான ஊழல் பட்டியல் அந்த சிவப்பு டைரியில் இருக்குமோ என்ற சந்தேகம் ராஜஸ்தான் மாநில மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வேண்டும் என்றே மணிப்பூர் பிரச்சனையை பேசி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்வங்கள் அதிகரித்தவாறு உள்ளது என ஆளும் கட்சி அமைச்சரே கூறியது விவாத பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-வ.தங்கவேல்