தேவைப்படுகிற சூழ்நிலை ஏற்பட்டால் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கார்கில் யுத்தத்தின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் நேற்று (ஜூலை 26) கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் இன்னுயிர் நீத்த தேசத்தின் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கார்கில் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
அதே போன்று லடாக்கின் திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் படை தளபதிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இதன் பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: கார்கில் யுத்தம் இந்தியா மீது வேண்டும் என்றே திணிக்கப்பட்டது. இந்தியா அந்த சமயத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமூகமான தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தது. கார்கில் யுத்தத்தில் ஆபரேஷன் விஜய் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலகத்துக்கே இந்திய ராணுவம் வலிமையான ஒரு செய்தியை சொல்லி உள்ளது. இந்தியாவின் நலன்களுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் எனில் இந்திய ராணுவம் எந்த விலை கொடுத்தேனும் அதனை முறியடிக்கும்; ஒரு போதும் பின்வாங்காது என்பதுதான் அந்த செய்தி.
கார்கில் யுத்தம் என்பது இரண்டு ராணுவங்களுக்கு இடையேயானது மட்டுமல்ல.. இரு தேசங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்தவை. கார்கில் யுத்தம் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி முடிவடைந்தது. அதன் பின், கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை.
இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. நாம் அமைதியை விரும்புவதால்தான் கார்கில் யுத்தத்தில் வெற்றியடைந்த போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செல்லவில்லை. நாம் சர்வதேச சட்டங்களை மதித்து நடப்பவர்கள். எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அன்று தாண்டி செல்லவில்லை என்பதற்காக நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்ட முடியாது என்பது அர்த்தம் கிடையாது. நாம் எல்லை கட்டுப்பாட்டை தாண்டுவோம். நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டவும் முடியும். வருங்காலங்களில் அப்படியான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டால் நாம் நிச்சயம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டுவோம் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
புல்வாமா தாக்குதல்:
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டம், அவந்திபோரா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் எல்லை தாண்டி நமது விமானப்படை வீரர்கள் மூலமாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது வெடி குண்டுகளை வீசி அழித்தது. இதில் பல நூறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானே குலை நடுங்கி கொண்டிருந்தது, திடீரென்று எல்லை தாண்டி இந்திய விமானப்படை வெடி குண்டுகளை வீசிய சம்பவம் உலக நாடுகளை வியந்து பார்க்க வைத்தது.
இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் பயங்கரவாத கும்பல் உலக நாடுகளில் எங்கு இருந்தாலும் அதனை அழிக்கும் வலிமை நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு உண்டு என்பதுதான் இந்த செய்தி உணர்த்துகிறது.
-வ.தங்கவேல்