கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை, மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி அவையை முடக்கியது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைத்தனர். பாஜக அரசு மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க தயார் என கூறினாலும் பிரதமர் விளக்கமளித்த பின்னரே விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 26) காலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் ஏற்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாக 330 வாக்குகள் பதிவாகி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் தலைத்தெறிக்க ஓட்டம் எடுத்ததை பார்த்தோம்.
தற்போது மீண்டும் எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே மணிப்பூர் பிரச்சனையை காரணம் காட்டி அவையை முடக்கியது மட்டுமின்றி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த முறையும் எதிர்க்கட்சிகள் தோல்வியை சந்திப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மக்களுக்காக சட்டங்களை நிறைவேற்ற உள்ள நாடாளுமன்றத்தை வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிறது. வருகின்ற தேர்தலில் அவர்கள் அனைவரும் படுதோல்வியை சந்திப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
-வ.தங்கவேல்