மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது பழங்குடியின பெண்கள் இரண்டு பேரை நிர்வாணமாக கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் அஜர்குமார் பல்லா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், இந்த வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும், இந்தச் சம்பவத்தில் இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (ஜூலை 28) விசாரணை நடைபெற இருக்கிறது. மணிப்பூரில் பெண்கள் நிர்வாகமாக கொண்டு செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை தெரிவித்தார். நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதே போன்று மத்திய அமைச்சர்கள், மணிப்பூர் மாநில முதலமைச்சர் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை பெற்றுத்தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கடந்த 20ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் அமர்வு இந்தச் சம்பவத்தைக் கண்டு வேதனை அடைவதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கூறினர்.
மேலும் வன்முறையில் பெண்கள் கருவியாக பயன்படுத்தப்படுவதை இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்தச் சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், மணிப்பூர் பெண்கள் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற மாநில அரசின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதை இது வெளிப்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை நடத்தினால் யார், இந்த கலவரத்திற்கு காரணம்? எதனால் தூண்டப்பட்டது என்ற பல்வேறு விவரங்கள் வெளியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.