மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) அதிகாலை 5.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜூலை 28) தமிழகத்திற்கு வருகை புரிந்தார். முதல் நாள் பயணத்தில் நேற்று ‘என் மண், என் மக்கள்’ அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை தொடக்க விழா, மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தமிழக பாஜக மாநில மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை 168 நாட்கள் நடைபெற்று சென்னையில் முடிவடைய உள்ளது.
இந்த நடைபயண தொடக்க விழா நேற்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சங்கை ஜின்னா, இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று அண்ணாமலை மேற்கொள்ள உள்ள பாதயாத்திரையை தொடங்கி வைத்து உரையாற்றினார். ஆளும் திமுக அரசு ஊழலில் திகைத்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் நீக்காமல் வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டலில் அமித்ஷா மற்றும் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் தங்கினர்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதிகாலை 5.30 மணிளவில் ராமநாதசாமி கோவிலுக்கு சென்ற அமித்ஷா அங்கு சாமி தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் ராமநாதசாமி கோவிலில் சாமிதரிசனம் செய்தனர். மத்திய உள்துறை அமைச்சர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-வ.தங்கவேல்