திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு கூடுதலாக 2 ரூபாய் தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ள சம்பவம் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூல் செய்த கரூர் கேங்கை போன்று மற்றொரு கேங் உருவாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவர். அது போன்று வருபவர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை அருகில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்துவது வழக்கம். இது மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கட்டணமாக ஒரு வண்டிக்கு ரூ.15 வசூல் செய்யப்படுகிறது. அதற்கான ரசீதும் வழங்கப்படுகிறது.
ஆனால் கட்டணத்தை விட கூடுதலாக ஒரு வண்டிக்கு 2 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக வாகன நிறுத்தத்தை பயன் படுத்தும் நுகர்வோர் புகார் எழுப்பியுள்ளனர். இது பற்றி நுகர்வோர் ஒருவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக தரணும் என்றால், அதே போன்று வண்டி நிறுத்தவும் ரூ.2 கூடுதலாக தரணும் என குறிப்பிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வண்டி நிறுத்திய பின் தந்த டோக்கனில் ரூ.15 அச்சிடப்பட்டிருந்தது.. தந்த இருபது ரூபாய் நோட்டிற்கு ரூ.3 மீதி தரப்பட்டது.
நாம் கேட்டது ஒரே கேள்வி..
ரூ.15 டோக்கனுக்கு ஏன் ரூ.17 என்ற கேள்வி..
வாகன நிறுத்தும் நபரிடம் வந்த பதில்கள்
பழைய ரசீது..
இவ்வளவு தான் வசூல் பண்ண சொல்றாங்க..
மாநகராட்சியில் 10 சதவீதம் ஏத்திட்டாங்க..
ஜிஎஸ்டி சார்..
எல்லாருக்கிட்டயும் தான வாங்குகிறோம்.
இரண்டு ரூபாதான சார்..
ஒரு கேள்விக்கு 6 விதமான பதில்கள்..
நாம் கேட்டது.. நீங்க ரூ.50 கூட வாங்கு, ஆனால் அதற்கு ரசீது கொடுங்கள் என்றாலும் முறையான பதில் இல்லை.
அந்நியன் படத்தில் வருவதை போன்று ஒருத்தருக்கு ரூ.2 என்றாலும் ஒரு நாளைக்கு எத்தனை ரூ.2, மாதம் எத்தனை ரூ.2 வரும்?
இது தவறு இப்படி அதிகம் வசூல் பண்ண கூடாது என கடும் வாக்குவாதம், பின்னர் நமது இரண்டு ரூபாய் திருப்பி தரப்பட்டது. இதில் வருத்தம் என்ன தெரியுமா..?
நாம் வாக்குவாதம் செய்யும் போதே மக்கள் அவர் கேட்ட ரூ.17 சத்தமில்லாமல் தந்து சென்றனர். மக்களே நல்லா வருவீங்க..
காந்தி மார்க்கெட் வண்டி நிறுத்த ரூ.15 என்பதே அதிகம். இதில் ரசீது இல்லாமல் ரூ.2 அதிகம் என்பது நிச்சயம் பகல் கொள்ளை.. இது மாநகராட்சிக்கு தெரியுமா? இல்லை தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கரூர் குரூப்பை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் கட்டாயமாக பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்து தரவேண்டும் என்ற கட்டளையிட்டு அதற்கான பணத்தை வசூல் செய்து வந்தனர். இது பற்றிய செய்திகள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததை பார்த்தோம். தற்போது திருச்சியிலும் மற்றொரு கரூர் கேங் சத்தமில்லாமல் உருவாகிறதா என்ற கேள்வி எழுகிறது.