இண்டூர் மின்வாரியத்தின் அத்துமீறல்.. லஞ்சம் வாங்கிக்கொண்டு அடுத்தவர்களின் நிலத்தில் அனுமதியில்லாமல் மின்கம்பம்!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட இண்டூரில் உதவி மின்வாரியம் செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்தால் உரிமையாளர் யார் என்பது முக்கியமில்லை. அடுத்தவர்களின் நிலத்தில் அனுமதியில்லாமல் மின்கம்பத்தை அமைத்துவிட்டு செல்வது தொடர்கதையாக உள்ளது.

அதே போன்று ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. இண்டூர் அருகே உள்ளது கூரம்பட்டி கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் இவரது நிலத்தில் அனுமதியில்லாமல் மின்கம்பத்தை நடுவில் அமைத்துவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேல் என்பவர் நிலத்தின் குறுக்கே மின்கம்பம் அமைப்பதற்காக கடந்த மாதம் அளவீடு செய்துள்ளனர். அப்போது அவர் எங்கள் நிலத்தின் குறுக்கே மின்கம்பம் அமைக்காதீர்கள். ஓரமாக செல்வதற்கு வழி உள்ளது. அதில் அமைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் வந்த மின்வாரிய அதிகாரி உங்கள் நிலத்தில் மின்கம்பம் அமைக்காமல் இருக்க ஆட்சேபனை கடிதம் ஒன்றை (ஏஇ) உதவி மின்பொறியாளரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வடிவேல் இண்டூரில் உள்ள மின்வாரிய உதவி மின்பொறியாளரிடம் நிலத்திற்கான சிட்டா மற்றும் ஆட்சேபனை கடிதம் இரண்டையும் இணைத்து கொடுத்துள்ளார்.

அதனை வாங்கி ஏஇ அருணகிரி, அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, உங்கள் நிலத்தில் மின்கம்பம் வராது என்று கூறியுள்ளார். அதனை நம்பி வடிவேல் கடந்த சனிக்கிழமை கோவில் சென்றுவிட்டு மீண்டும் செவ்வாய்கிழமை ஊருக்கு வந்துள்ளார். அப்போது வந்து தனது நிலத்தை பார்த்தபோது மின்கம்பம் போடப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆட்சேபனை கடிதம் கொடுத்த பின்னரும் எப்படி அனுமதியில்லாமல் ஒருவரின் பட்டா நிலத்தில் மின்கம்பம் அமைக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக விவசாயி வடிவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது நிலத்திற்கு அருகே செல்வராஜ் என்பவர் நிலத்திற்கு மின்கம்பம் அமைப்பதற்காக எனது நிலத்தின் குறுக்கே அளவீடு செய்யும் பணி கடந்த ஜூலை 15ம் தேதி நடைபெற்றதாக அறிந்தேன். இதன் பின்னர் இண்டூர் உதவி மின்வாரியத்திற்கு சென்று, எனது ஆட்சேபனை கடிதத்தை கடந்த ஜூலை 17ம் தேதி உதவி மின்பொறியாளரிடம் அளித்தேன். அந்த கடிதத்தில், எனது நிலத்தில் எனது அனுமதி இல்லாமல் மின்கம்பம் அமைக்கக்கூடாது. மின் கம்பம் அமைப்பதற்கான மாற்று வழி உள்ளது. அதில் அமைத்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் நான் கோவிலுக்கு சென்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மின் கம்பத்தை அமைத்துள்ளனர். நான் கோவிலில் இருந்து வந்து பார்த்தபோதுதான் எனக்கு தெரிந்தது. எனக்கு இருக்கும் நிலமே குறைந்த அளவுதான் அதிலும் மின்கம்பத்தை அமைத்து விட்டால், நான் எப்படி விவசாயம் செய்வேன். அதுவும் மானாவாரியான பயிர்களை செய்து வருகிறேன். மழையின்றி பயிர் கருகிய நிலையில் உள்ளது. பிற்காலங்களில் ஒரு போர்வெல் வாகனம் செல்ல முடியாதவாறு எனது நிலத்தில் மின்கம்பம் போடப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவலியையும் கொடுத்துள்ளது. எனவே உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்று வழியில் அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எனது அனுமதியின்றி மின்கம்பம் அமைக்க உத்தரவிட்ட மின்பொறியாளர் அருணகிரி மற்றும் ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி உதவி மின்பொறியாளரிடம் நேரில் சென்று கேட்டபோது, விவசாயி கடிதம் கொடுத்தது எனக்கு மறந்து போச்சு, கவனிக்கவில்லை அதனாலதான் இப்படி நடந்துவிட்டது என்றார். ஒருவர் மனு அளிக்கிறார் என்றால் அதன் மீது சரியாக கவனம் செலுத்தாத இவர் எப்படி மின்வாரியத்தில் பணி செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மின்சாரத்தின் மீது தவறுதலாக கை வைத்து விட்டால் என்ன நடக்கும் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்படி ஒரு அஜாக்ரதையான ரீதியில் நடந்து கொள்ளும் அதிகாரி மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top