எம்.பி.க்களை பார்த்து ராகுல்காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கண்டனம் தெரிவித்தார்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசி முடித்தவுடன், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசினார். அப்போது அவர் ராகுல்காந்தி செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசியதாவது: ராகுல்காந்தி, எம்.பி.க்களை பார்த்து ‘பறக்கும் முத்தம்’ கொடுத்து செல்கிறார். பெண் எம்.பி.க்களும் அமர்ந்துள்ள சபையை பார்த்து இப்படி செய்வது கண்ணியக்குறைவானது. நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு இத்தகைய அநாகரிக செயல் நடந்தது இல்லை. அவர் ஒரு பெண் விரோதி. இந்தியா கொலை செய்யப்பட்டதாக ராகுல்காந்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படி ஒருவர் பேசுவது இதுவே முதல்முறை. அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆதரிக்கிறீர்கள்.
மணிப்பூர் பிளவுபடுத்தப்படவில்லை. அது இந்தியாவின் ஒரு அங்கம். தமிழகத்தில் அவரது எதிர்க்கட்சியான திமுக அமைச்சர் ஒருவர், ‘‘இந்தியா என்றால் வடஇந்தியாவைத்தான் குறிக்கும்’’ என்று பேசியுள்ளார். தைரியம் இருந்தால், ராகுல்காந்தி அதுபற்றி பேச வேண்டும். ஒரு காங்கிரஸ் தலைவர் காஷ்மீர் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இது காங்கிரஸ் தலைமையின் உத்தரவுப்படி பேசப்படுகிறதா? நீங்கள் இந்தியா அல்ல. இந்தியாவில் ஊழலையும், திறமையின்மையையும் அறிமுகப்படுத்தியது நீங்கள்.
பாதயாத்திரை பற்றி ராகுல்காந்தி பேசினார். இந்தியா இதுவரை பார்த்த காஷ்மீர், ரத்தத்தில் தோய்ந்து இருந்தது. ஆனால், ராகுல்காந்தி அங்கு சென்றபோது, எல்லோரும் பனிப்பந்துகளை கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். 370வது பிரிவை மோடி அரசு நீக்கியதால்தான் இது சாத்தியமானது. 370வது பிரிவை மீண்டும் கொண்டு வருவதாகவும் ராகுல்காந்தி பேசியுள்ளார். அதை மீண்டும் கொண்டுவர முடியாது.
காங்கிரஸ் கட்சியின் வரலாறு, ரத்தம் படிந்த வரலாறு. நெருக்கடி நிலையும், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரமும், காஷ்மீரில் நடந்த கொலைகளும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்தன. அதைப்பற்றி காங்கிரஸ் பேசத்தயாரா? இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் 20 பெண் எம்.பி.க்கள் புகார்:
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பெண் எம்.பி.க்களை பார்த்து ராகுல்காந்தி ‘பறக்கும் முத்தம்’ அளித்ததாக சபாநாயகரிடம் 20 பெண் எம்.பி.க்கள் புகார் அளித்தனர்.
ராகுல்காந்தி நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பேசி முடித்து விட்டு வெளியேறினார். அவரது பேச்சுக்கும், செயலுக்கும் பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அதே சமயத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசத் தொடங்கினார். உடனே ராகுல்காந்தி திரும்பி பார்த்து, ஸ்மிரிதி இரானி மற்றும் பெண் எம்.பி.க்களை பார்த்து ‘பறக்கும் முத்தம்’ கொடுத்தபடியே வெளியேறிச் சென்றார்.
இவரது செயலுக்கு பாஜக பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது பற்றி சபாநாயகர் ஓம்பிர்லாவை பாஜக பெண் எம்.பி.க்கள் சந்தித்தனர். பறக்கும் முத்தம் அளித்த ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அதில் 20க்கும் அதிகமான பாஜக பெண் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.