திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் சுவர்கள் இடிந்து விழுந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என பக்தர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பரிகார பூஜைகள் நடைபெறாமல் இருப்பதால் நாட்டிற்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்கு உடையது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் முதல்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். பிரம்மாண்டமான இந்த ஆலயம் பல்வேறு சிறப்பம்சம்ங்களை கொண்டது. 21 கோபுரங்களையும் கொண்டது இந்த ஆலயம். சுக்கிரன் தலமாக போற்றப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும், பராமரிப்பு பணிகளுக்கான முதற்கட்டமாக சாரம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கோபுரத்தின் இரண்டாம் நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலமுறை முறையிட்டும் பராமரிப்பு செய்யாமல் விட்டது ஏன் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விடியல் அரசின் அறநிலையத்துறை எவ்வித பதிலும் கூறவில்லை.
இதனிடையே கோவிலில் ஏதாவது தீ விபத்து நிகழ்ந்தாலோ, கொடிமரம் சேதமடைந்தாலோ, கோபுரம் இடிந்தாலே ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் சிதிலமடைந்து இரண்டாவது நிலை சுவர் இடிந்து விழுந்து சில நாட்கள் ஆகியும் பரிகார பூஜைகள் செய்யாமல் உள்ளதாக பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். இதனால் நாட்டிற்கு எதுவும் ஆபத்து வருமோ என்றும் பக்தர்கள் சிலர் அச்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.