ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின நபரை காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷூவை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின நபர் ஒருவரை ஷூவை நக்க வைத்த சம்பவத்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோபால் மீனா மற்றும் டி.எஸ்.பி. மீது பரபரப்பான புகார் ஒன்றை அளிக்கப் பட்டுள்ளது.
பாதிப்புக்கு ஆளான 51 வயதான நபர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ‘‘கடந்த ஜூன் 30ஆம் தேதி நான் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்னை தாக்கி ஒரு இடத்திற்கு இழுத்துச் சென்றனர். அங்கே டிஎஸ்பி சிவகுமார் பரத்வாஜ் என்னை தாக்கியதுடன் என் மீது சிறுநீர் கழித்தார்.
டிஎஸ்பி, காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனாவின் பெயரை சொல்லி, ‘‘அவர் இந்த பகுதியில் ராஜா’’ என்றபடி என்னை தாக்கினார். மேலும் அங்கு வந்திருந்த எம்எல்ஏ கோபால் மீனா தனது ஷூவை நக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினார்.
எம்எல்ஏ கோபால் மீனாவும், டிஎஸ்பியும் சேர்ந்து எனது செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு இங்கு நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர். இது குறித்து புகார் அளிக்க காவல்துறையினரை அணுகியபோது அவர்கள் புகாரினை ஏற்க மறுத்துவிட்டனர். சில காவல் உயரதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்று அந்த புகாரில் பட்டியலின நபர் கூறியுள்ளார்.
பாதிப்புக்கு ஆளானவரின் புகாரை ஏற்க காவல்துறையினர் மறுத்துவிட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அதன் பிறகே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் எம்எல்ஏ கோபால் மீனா மற்றும் டிஎஸ்பி சிவகுமார் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புகார் கொடுத்ததற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ., மற்றும் டி.எஸ்.பி. கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து தற்போது சிபி-சிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலத்தில் தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் நடைபெறுகின்றன. இதற்கு எல்லாம் (திமிர்க்கூட்டணி) ராகுல் காந்தி, சோனியா மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த போக மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் உடனே அரசியல் லாபத்திற்காக கிளம்பி விடுவதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.