‘‘வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, ஜெயின் கோவில் சிலைகளை மீட்பதில் போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்,’’ என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, அவர் நேற்று (ஆகஸ்ட் 14) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், வைகாவூர் திருமலை என அழைக்கப்படும், ஜெயின் கோவில் உள்ளது. இக்கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. அங்கு, 1,006 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட சிலை இருந்தது. அந்தச் சிலை, 20 ஆண்டுகளுக்கு முன் திருடு போய் உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன் என்பவர் தான் சிலையை கடத்தச் சொன்னவர். அவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக, பல்வேறு வழக்குகள் உள்ளன. 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.
வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளிவந்த சஞ்சீவி அசோகன், தற்போதும் சிலை கடத்தல் தொடர்பாக வெளியில் சுற்றுகிறார். இது போலீசாருக்கும் தெரியும். ஆனால், அவரைக் கைது செய்யாமல் அலட்சியம் இருக்கின்றனர்.
இந்த சிலையை வாங்கிய சுபாஷ் சந்திர கபூர், புழல் சிறையில் உள்ளார். அவர் வெளியில் வந்தால் இருவரும் சேர்ந்து வெளிநாடுகளுக்குத் தப்பி விடுவர். இரண்டும் பேரும் தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடத்தி உள்ளனர்.
போளூரில் திருடப்பட்ட ஜெயின் கோவில் சிலையை கடைசியாக, கேரளாவைச் சேர்ந்த ராஜு சவுத்ரி என்பவர் வாங்கியிக்கிறார். அவர், தற்போது நியூயார்க்கில் உள்ளார். தமிழகத்தில் உள்ள, கோவில்களில் இருந்து திருடு போனச் சிலைகள் பற்றி, போலீசார் எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய மறுக்கின்றனர்.
இந்துக் கோவில் சிலைகள் மட்டுமல்ல, ஜெயின் கோவில்களில் இருந்து திருடுபோன, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும், போலீசார் அலட்சியம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்துக் கோவில்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டு வருகின்றன. பல கோவில்களை சரியாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். சமீபத்தில் கூட திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்தது. இது போன்று பல கோவில்களில் அவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு ஒரே தீர்வு, இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து அனைத்து கோவில்களையும் விடுவித்து தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் கோவில்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் என்கின்றனர் ஆன்மிகப் பெருமக்கள்.