இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே, இந்தியாவில் ஹிந்துயிசமே மிகவும் பழமை வாய்ந்தது. மதமாற்றதிற்குப் பின்னர்தான் முஸ்லிம்கள் அதிகளவு உருவாகினர் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசினார்.
ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ஹிந்துயிசம், ஹிந்து மதம் முஸ்லிம் மதத்தை விட மிகப் பழமையானது. இந்தியாவில் பிறக்கும் போது அனைவரும் ஹிந்துக்களாகவே பிறந்தனர். 600 ஆண்டுகளுக்கு முன்னர் காஷ்மீரில் முஸ்லிம்களே கிடையாது. பண்டிட்டுகளே இஸ்லாமியர்களாக மாறினர்.
நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி பேசும் போது பலர் வெளியில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் எனப் பேசினார். ஆனால் நான் அதனை மறுத்தேன். யாரும் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் முஸ்லிம்கள் 1,500 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் வந்தனர்.
இந்தியாவில் முகலாயர்கள் காலத்தில் ராணுவ படையில் இருந்தவர்கள் வெகு சிலர் வெளியில் இருந்து இங்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் மூலம் பழமையான ஹிந்துக்கள் சிலர் முஸ்லிமாக மதம் மாறியிருக்கலாம். இது போன்ற நடந்தமைக்கு காஷ்மீரே எடுத்துக்காட்டு.
ஹிந்துக்களுக்காகவும், இஸ்லாமியர்களுக்காகவும், தலித், மற்றும் காஷ்மீரிகளுக்காகவும் இந்த மாநிலத்தில் அனைவரும் உழைப்போம். இவ்வாறு குலாம் நபி பேசினார். இந்துக்களே மதம் மாறிய முஸ்லிம்கள் என்ற பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.