பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, சுதந்திர தின உரையில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்திற்கு மத்திய துறை ஒப்புதல் அளித்ததுள்ள நிலையில், விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து பல லட்சம் பேர் குறைவான வட்டியில் கடன் பெற உள்ளனர்.
ஆகஸ்ட் 15, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
2028 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 13,000 கோடி ரூபாய் நிதி ஒத்துக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டம் வாயிலாக முதல் கட்டமாக 18 பாரம்பரிய வர்த்தகங்களை செய்யும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படும்.
பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய்க்கும், 2வது தவணையாக 2 லட்சம் ரூபாய்க்கும் வெறும் 5 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்பட உள்ளது. இதன் வங்கிகளில் அளிக்கப்படும் அனைத்து விதமான ரீடைல் கடன்களை காட்டிலும் இது மிகவும் குறைவானது. பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் வாயிலாக நிதி உதவி மட்டும் அல்லாமல் திறன் மேம்பாடு, கருவித்தொகுப்புக்கான ஊக்குவிப்பு தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் மார்கெட்டிங் ஆதரவுகளை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் முதற்கட்டமாக தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், பூட்டுக்காரர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், செருப்புத் தொழிலாளிகள் மற்றும் கொத்தனார்கள் என சுமார் 18 பிரிவினருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.