மதுரை தோப்பூரில் பிரமாண்டமான முறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது தமிழகம் அறிந்த விஷயம். தற்போது, அதற்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு டெல்லியில் அமைந்துள்ளது போன்றுபிரம்மாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திலும் அமைக்க முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தின் தென்மாவட்டமான மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு கடந்த 2015ம் ஆண்டு அனுமதி வழங்கியது. அதன்படி மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் திமுக அரசு போதுமான நிலம் கையகப்படுத்தாக காரணத்தினால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,967 கோடி ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுவிட்டதாகவும், மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மருத்துவமனை கட்டப்பட்டு விட்டால் உயர்தர சிகிச்சை அனைத்து தமிழர்களுக்கும் கிடைக்கும். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.