அடுத்த சுகாதார அவசர நிலையை  எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி!

கொரோனா பெருந்தொற்று பரவல் போன்று அடுத்த சுகாதார அவசரநிலையை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஜி20 நாடுகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், அமைச்சர்களுக்கான பல்வேறு கட்ட கூட்டங்களை இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் காணொலி வழியாகப் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதேச சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், சுகாதார முன்னெடுப்புகள் பொதுவான தளத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 

மக்கள் அதிகளவில் பலன்பெறும் நோக்கத்தில் புத்தாக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் புத்தாக்க நடவடிக்கைகளில் போலியான நிதியுதவி வழங்கப்படுவதும், ஒரே திட்டங்களுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்து நிதி வழங்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் நவீன தொழில்நுட்பங்கள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சுகாதார சேவைகளை எண்ம வழியில் வழங்குவதில் தெற்குலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சுகாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான இலக்கை அடைவதற்கும் இந்த முறையிலான நடவடிக்கை உதவும்.

மேலும் உலகின் குறிப்பிட்ட பகுதியில் நிகழும் சுகாதார அவசர நிலையானது, மற்ற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எடுத்துக்காட்டியது. கொரோனா தொற்றுப் பரவலை போன்ற அடுத்த சுகாதார அவசர நிலையைத் தடுப்பது, எதிர்கொள்வது மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கான தயார் நிலையை ஒருங்கிணைந்து ஏற்படுத்த வேண்டும்.

100க்கும் அதிகமான நாடுகளுக்கு சுமார் 30 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

காச நோயை 2030ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் காச நோயை 2025ஆம் ஆண்டுக்குள்ளாகவே ஒழிப்பதற்கு இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அந்த இயக்கத்தை செயல்படுத்தி வரும் திட்டங்கள், மக்கள் இயக்கமாக மாறியுள்ளன. இவ்வாறு பிரதமர்  பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top