கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடு அதிகளவு உயர்ந்திருப்பதாகவும் பாஜக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரதிய ஜனதா உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் மாநாடு, தாதர்-நகர் ஹவேலியில் நடைபெற்றது. அதில், பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர்,
நான் பிரதமர் ஆன பின்னர் ஏழைகளுக்கு கழிப்பறை கட்டித்தருவதையும், வங்கிக்கணக்குத் தொடங்குவதற்கும் அதிக முன்னுரிமை கொடுத்து வந்தேன்.
அதே போன்று உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நீங்கள், உங்களின் கிராம மற்றும் மாவட்டத்துக்கு சில பணிகளை எடுத்துச் செய்ய முன்வர வேண்டும். அதிலும் மக்கள் ஆதரவுடன் அதனை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.
பாரதிய ஜனதா மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆண்டுதோறும் 3 திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சிகளுக்கு நிதிஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே நிதி ஒரு பிரச்னையே கிடையாது.
ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்த உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு தற்போது ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் மாவட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டித் கொடுத்துள்ளோம். அனைத்து தரப்பினருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பது பாரதிய ஜனதாவுக்கு வெறும் கோஷம் அல்ல. அதனுடன் ஒவ்வொரு தருணமும் வாழ வேண்டும்.
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு கிராமம், தாலுகா மாவட்டம் ஆகியவற்றை வளர்ச்சிப் பாதையில் செய்வதை உறுதி செய்தால் மட்டுமே இதனை சாதிக்க முடியும். வளர்ச்சி திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.