வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் யாரென்று தெரியாமல் உள்ள நிலையில், திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ல் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக சுமார் 147 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இன்றுவரை முடிவு தெரியவில்லை. நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட நீரை பரிசோதனை செய்ததில் ஒரு பெண், இரண்டு ஆண்களுடையது என்பது மட்டும் உறுதியானது. இந்த சம்பவத்தில் இன்றுவரை குற்றவாளிகளை திமுக அரசு கைது செய்யாமல் உள்ள நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பூட்டின் மீது மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருத்தணியை அடுத்த மத்தூர் பகுதியில் செயல்படும் இப்பள்ளிக்கு வழக்கம்போல் மாணவ, மாணவியர் கடந்த ஆகஸ்ட் 18 அன்று வந்தபோது வகுப்பறையின் இரும்புக் கதவு பூட்டின் மீது மனிதக் கழிவு பூசியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தபோது பல்வேறு இடங்களில் மனிதக் கழிவுகள் சிதறிக் கிடந்ததும் குடிநீர் தொட்டி உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு வந்து அநாகரிக செயலில் ஈடுபட்டோர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி பெற்றோர்கள் தரப்பினர் கூறியதாவது: பள்ளிக்கு உட்கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடைபெறுகின்றன
. பள்ளி வளாகத்தில் மர்ம நபர்கள் மலம் கழிப்பதைத் தடுக்கும்படி பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பள்ளிக்குப் போதுமான வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.