இந்து தர்மப்படி சன்னியாசிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது மரபு. அந்த மரபுப்படியே உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதனை தமிழகத்தில் உள்ள திக, திமுக உள்ளிட்ட அமைப்புகள்
கடவுள் மறுப்பு கொள்கை என்ற போர்வையில் விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமான ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முக்கிய திரைப்படம் நடித்து முடித்த பின்னர் இமயமலைக்கு சென்று அங்குள்ள ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவது மற்றும் தியானத்தில் ஈடுபடுவது அவரின் வழக்கம்.
அதே போன்று கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து இமயமலைக்கு ரஜினிகாந்த் பயணம் மேற்கொண்டார். அப்போது பாபா குகையில் தனது நண்பர்களுடன் தியானம் செய்தார். அதனை முடித்துக்கொண்டு பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 19 மாலை ரஜினிகாந்த் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். வீட்டு வாசலில் வந்து வரவேற்ற யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதனை தமிழகத்தில் உள்ள திக., திமுக போன்ற இந்து தர்மத்திற்கு எதிராக செயல்படும் அமைப்பினர் விமர்சனம் செய்தனர். எப்படி வயதில் சிறியவராக உள்ள யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் ஆசிர்வாதம் வாங்கலாம் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டனர்.
இதற்கு பதிலடியாக இந்து தர்மத்தை நேசிக்கும் அனைவருமே ரஜினிகாந்திற்கு ஆதரவாக பதிவிட்டனர். அதாவது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு மடாதிபதியாக உள்ளார். மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றாலும் தனது உடையில் இன்றுவரை சமரசம் இன்றி காவி உடையை அணிந்து வருகிறார். முதல்வராக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் ஒரு துறவியாக வாழ்வு நடத்துகிறார். எப்போதும் ஆன்மீக சிந்தனையில் அதிக கவனம் செலுத்துபவராகவும் உள்ளார். எனவே நடிகர் ரஜினிகாந்த் ஒரு மடாதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியதில் எவ்வித தவறும் இல்லை.
அதே போன்று பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உட்பட பலரும் மடாதிபதிகளிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். வயது குறைவாக இருப்பதால் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கக்கூடாது என்று இந்து தர்மத்தில் இல்லை. ஆன்மீகத்தை நேசிப்பவர்களின் காலில் ஆசிர்வாதம் வாங்குவது சரியானதே எனப் பதிவிட்டு வருகின்றனர்.
– வ.தங்கவேல்