திராவிட மாடல் ஆட்சியில் எல்லாமே மக்களுக்கு செய்து விட்டோம் என தம்பட்டம் அடிக்கும் நிலையில் பழங்குடியினர் வாழும் ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களில் சாலை வசதி இல்லாதது வெளிவந்து அரசின் பொய்யுரையை அம்பலப் படுத்தியுள்ளது.
இங்குள்ள மக்கள் தங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதாக பழங்குடியின வேதனையுடன் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள மக்களுக்கு அடிப்படை தேவைகளான சாலை வசதி மற்றும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் திமுக அரசு எதுவுமே மலை கிராம மக்களுக்கு செய்தது கிடையாது. கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்கு சாலை வசதி மிகமுக்கியத்துவம் பெறுகிறது. சமதளத்தில் வசிக்கும் மக்களுக்கு கிடைத்துள்ள சாலை வசதி மலைவாழ் மக்களுக்கு இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நெடுஞ்சாலைத்துறை மூலம் ஜவ்வாதுமலைக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 427 மலை கிராமங்கள் உள்ளது.
ஆனால், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் பிரதான சாலையை வந்தடைதவற்கும், கல்வி மற்றும் மருத்துவ வசதி பெறுவதற்கும், வியாபார தலங்களுக்கு வந்து செல்லவும் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் என்பது மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கிறது.
நகர மக்களின் வளர்ச்சியுடன் மலைவாழ் மக்களின் நாகரீக வளர்ச்சியை ஒப்பிட்டால் சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கி உள்ளனர். அதிலும் ஒரு சில மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை இன்னும் ஆதிகாலத்தையே நினைவுப்படுத்துகிறது.
இது தொடர்பாக ஜவ்வாதுமலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கூறும்போது: ஜவ்வாதுமலையில் 427 மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 300க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதியே கிடையாது. காடு, மலை, மேடு என்று கடந்துதான் வாழ்ந்து வருகிறோம். சில கிராமங்களில் சாலை அமைக்கிறோம் என்று வெறும் ஜல்லி கற்கள் மட்டுமே போடப்பட்டிருக்கும். அதுவும் மழை பெய்தால் காணாமல் போய்விடும்.
வாகன போக்குவரத்து என்பது முற்றிலும் இருக்காது. இரண்டு முதல் ஐந்து கி.மி., தொலை கடந்தால்தான், இணைப்புச் சாலையை சென்றடைய முடியும். சில கிராமங்களில் 10 கி.மீ., தொலைவு கூட இருக்கும். சாலை வசதியில்லாததால் நடுநிலை அல்லது உயர்நிலையுடன் மாணவர்களின் கல்வி தடைப்பட்டு விடுகிறது. உயர் கல்வியை பொறுத்தவரையில் மலைவாழ் மாணவ, மாணவிகளுக்கு கானல் நீராகவே உள்ளது.
யாராவதை பாம்பு மற்றும் விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. கர்ப்பிணிகளும், முதியோர்களும் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகின்றனர். விவசாய விளைப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் முடியவில்லை. சாலை வசதிக்கேட்டு ஆட்சியாளர்களிடம் பலமுறை மனுக்கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.
சில நேரங்களில் வனத்துறை அனுமதி கொடுப்பதில்லை என்ற காரணத்தை கூறி காலத்தை கடத்தி விடுகின்றனர். சாலை வசதியில்லாததால் நகரம் மற்றும் சமதளத்தில் உள்ள கிராம மக்களின் வளர்ச்சியில் மிக, மிக பின்தங்கியுள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை தானே புகழ்வதை நிறுத்திவிட்டு மலை கிராம மக்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்து சுமார் 77 ஆண்டை கடந்தும் சாலை வசதியில்லாமல் தமிழகத்தில் மலைவாழ் மக்கள்
இருப்பது வேதனையாக உள்ளது. மத்திய அரசு பல்வேறு வகைகளில் நிதி ஒதுக்கீடு செய்தும் மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இன்றுவரை தொடர்கதையாகவே உள்ளது.