ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மிக விரைவாகச் செல்வதற்கு விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். டெல்லி துவாரகா விரைவுச் சாலை அமைக்கின்ற திட்டத்தில் முறைகேடு நடந்ததாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இது பற்றி ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: துவாராகா விரைவுச் சாலை என்பது சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டியது போன்று 29 கி.மீ., அல்ல. அது மொத்தம் 230 கி.மீ. அதன்படி ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.9.5 கோடி செலவு செய்யப்பட்டது. சிஏஜி அதிகாரிகளிடம் இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்டு அவர்களும் சமாதானம் அடைந்தனர். இருந்த போதிலும் அவர்கள் அறிக்கையில் 29 கி.மீ., என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர் என்றார்.
எதிர்க்கட்சி கூட்டணி பற்றிய கேள்விக்கு நிதின் கட்கரி பேசும்போது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கட்டமைத்ததே பாஜகதான். கொள்கை ரீதியில் ஒரு போதும் இணைந்து போக முடியாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்திராதவர்கள் ஒன்றினைந்து தேநீர் அருந்தினர். ஆனால் தற்போது இணைந்து எங்களை எதிர்க்க வருகின்றனர் என்றார்.
மேலும் திட்டங்கள் பற்றி பேசும்போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரைவுச்சாலை அமைப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம். டெல்லி மும்பை விரைவுச்சாலை வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். சூரத் முதல் நாசிக் வரையிலும், நாசிக் முதல் அஹமது நகர் வரையிலும் பசுமை வழிச்சாலை உருவாக்கி வருகிறோம். அண்டை நாடுகளான மியான்மர், வங்கதேசம், பூட்டான், நேபாளத்துக்குள் சாலை அமைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.